Breaking News
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு கட்சியினரின் கோரிக்கையை ஏற்று பொறுப்பை ஏற்க சம்மதம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ந் தேதி காலமானார்.

புதிய பொதுச்செயலாளர்

அவரின் மறைவு அ.தி.மு.க. மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, கட்சியின் புதிய பொதுச்செயலாளர் யார்? என்ற கேள்வியும் எழுந்தது.

இந்த பொறுப்புக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரவேண்டும் என்று கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் வற்புறுத்தி வந்தனர். மேலும், மாவட்ட அளவில் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி தீர்மானத்தையும் நிறைவேற்றினர்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ. க்கள், எம்.பி.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் போயஸ் கார்டன் சென்று சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அவசர பொதுக்குழு கூட்டம்

இதனால் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியானது.

இந்தநிலையில் அ.தி.மு.க. அவசர பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நேற்று காலை தொடங்கியது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் அந்த மண்டபம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்காக தமிழகம் முழுவதில் இருந்தும் அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழு உறுப்பினர்கள் என 3 ஆயிரம் பேர் கார் மற்றும் வேன்களில் வந்தனர். அவர்களிடம் போலீசார் பொதுக்குழுவுக்கான அழைப்பிதழை சரிபார்த்த பின்னரே உள்ளே அனுமதித்தனர்.

ஜெயலலிதாவின் நாற்காலி

பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்காக அ.தி.மு.க. பொருளாளரும், முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் காலை 8.50 மணிக்கு வந்தார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும் காரில் வந்தனர்.

அ.தி.மு.க. பொதுக்குழு சரியாக 9.30 மணிக்கு தொடங்கியது. பொதுக்குழு மேடையின் நடுப்பகுதியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எப்போதும் பயன்படுத்தும் நாற்காலி போடப்பட்டிருந்தது. அதன் மேல் ஜெயலலிதா உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. பொதுக்குழு கூட்டம் தொடங்கும் முன்பு அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் ஜெயலலிதா படத்துக்கு முன்பு மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

பொதுச்செயலாளராக சசிகலா

இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் பொதுக்குழு கூட்டத்தை தொடங்கிவைத்தார்.

பொதுக்குழுவில் முதல் தீர்மானமாக மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 5-வது தீர்மானமாக புதிய பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக, பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தீர்மானத்தின் நகலை எடுத்துக்கொண்டு கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே காலை 10.20 மணியளவில் கூட்டத்தில் இருந்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் வானகரத்தில் இருந்து போயஸ் கார்டனுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் சசிகலாவை சந்தித்து தீர்மானத்தை கொடுத்தனர். அதைத்தொடர்ந்து பொறுப்பை ஏற்க சசிகலா சம்மதம் தெரிவித்தார்.

பொதுக்குழுவில் முதல் தீர்மானத்தை அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்மொழிந்தனர். இதனை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் வழிமொழிந்தனர்.

தீர்மானங்கள்

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* அன்புக்குரிய மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று நம்மிடையே இல்லை என்ற எண்ணமே நம் இதயங்களை கூரிய வாள் கொண்டு பிளக்கிறது. ஈடு செய்யமுடியாத இழப்பு, எத்தனை பெரிய இழப்பு அ.தி.மு.க.வுக்கும், தமிழக மக்களுக்கும். அவருக்கு இறைவன் ஆன்ம சாந்தியையும், நித்திய இளைப்பாறுதலையும் தந்தருள இந்த பொதுக்குழு கண்ணீர் மல்க வேண்டி பிரார்த்திக்கிறது. ஜெயலலிதாவின் நினைவை போற்றி இந்த பொதுக்குழு மவுன அஞ்சலி செலுத்துகிறது.

* மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தபோது கட்சி பாகுபாடுகள் இன்றி அவர் பூரண நலம் பெற உளப்பூர்வமாக பிரார்த்தித்ததை இந்த பொதுக்குழு நன்றியோடு நினைவுகூருகிறது. ஜெயலலிதாவை தங்கள் அன்புக்குரிய அம்மாவாக ஏற்று, உளமாற அன்பு செய்து வாழ்த்தி வணங்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பொதுக்குழு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

‘கழகமே குடும்பம்’

* எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இனி தலை தூக்காது என்று எண்ணி இருந்தவர்களின் கனவுகளை ஜெயலலிதா தகர்த்து அ.தி.மு.க.வை ஒரே குடும்பமாக்கி இரட்டை இலை சின்னத்தை மீட்டு அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார். 32 ஆண்டுகள் இடைவெளிக்குப்பிறகு சட்டமன்ற பொதுத்தேர்தலில் தொடர் வெற்றிகளை பெற்று ஆட்சியில் தொடர்ந்து நீடிக்கும் கட்சியாக அ.தி.மு.க.வை உருவாக்கிக் காட்டினார். கட்சித் தொண்டர்களின் எண்ணிக்கையையும் 1½ கோடியாக உயர செய்தார்.

தன்னலம் சிறிதும் இல்லாமல் ‘கழகமே குடும்பம், அந்த குடும்பத்தின் தாய் நானே’ என்று அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் நம்மிடையே இல்லை என்ற நிலை ஏற்பட்டிருப்பினும், அவர் வழங்கி சென்றிருக்கும் வழிகாட்டுதல்களால் அ.தி.மு.க. தமிழகத்தை தொடர்ந்து நல்வழியில் அழைத்து செல்லும். அவர் காட்டிய வழியில் நல்லாட்சி வழங்கும் என்று உறுதிமொழி இந்த பொதுக்குழு மேற்கொள்கிறது.

‘மக்களால் அம்மா, மக்களுக்காக அம்மா’

* இந்திய நாட்டில் 6 முறை முதல்-அமைச்சராக பதவியேற்ற ஒரே பெண்மணி என்ற பெருமை ஜெயலலிதாவையே சாரும். காவிரி நதிநீர் பிரச்சினையில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினை மத்திய அரசிதழில் வெளியிட செய்தார். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டின் ஒப்புதலை பெற்றார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்தின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்த்துவிடாமல் தடுத்தார்.

சட்டமன்றத்தில் அவர் இயற்றிய தீர்மானங்கள் இலங்கை தமிழர்களின் சுயஉரிமை போராட்டத்தில் மைல்கல். சட்டம் ஒழுங்கை பாதுகாத்து தூய்மையான ஆட்சியை நடத்தியவர்.

அன்னை தெரசாவின் பாராட்டுகளை ‘தொட்டில் குழந்தை திட்டம்’ பெற்றது. மழைநீர் சேகரிப்பு திட்டம் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்டது. விலையில்லா 20 கிலோ அரிசி, திருமாங்கல்யம் திட்டம், மடிக்கணினி திட்டம், அம்மா உணவகம், 100 யூனிட் மின்சாரம் இலவசம், சமூக நீதி காக்க 69 சதவீத இடஒதுக்கீடு போன்ற ஜெயலலிதாவின் திட்டங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். ‘மக்களால் அம்மா, மக்களுக்காக அம்மா’ என்ற சொல்படி வாழ்ந்தவர். அவரின் திட்டங்களை இந்த பொதுக்குழு நன்றியோடும், மிகுந்த பெருமிதத்தோடும் பதிவு செய்கிறது.

ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி

* அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்து கட்சித் தொண்டர்களுக்கு தாயாக தவ வாழ்வு வாழ்ந்த ஒப்பற்ற தலைவியை இழந்து கழகம் இன்று கலங்கி நிற்கிறது. ‘அ.தி.மு.க.வை இனி யார் வழிநடத்திச் செல்வது?’ என்ற நிலை ஏற்பட்டபோது, 1½ கோடிக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரது நெஞ்சங்களிலும் வி.கே.சசிகலா பெயர் தான் எழுந்தது.

எனவே அ.தி.மு.க.வை வழிநடத்தி செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுப்பது, கொள்கைகளை வகுப்பது, கட்சியின் அன்றாட செலவுகளுக்கு வங்கிக்கணக்குகளை இயக்க பொருளாளருக்கு அதிகாரம் வழங்குவது மற்றும் அனைத்து செயல்பாடுகளையும் ஏற்று நடத்த அதிகாரம் வழங்குவது ஆகிய பணிகளுக்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் நியமிக்கப்படுவது மிகவும் இன்றியமையாத பணி.

அதனை முடிவு செய்யும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியும், ‘சின்னம்மா’ என்று நம் அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் வி.கே.சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பணியாற்ற உகந்தவர் என்று இந்த பொதுக்குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது.

1987-ம் ஆண்டு அ.தி.மு.க.வுக்கு சோதனை ஏற்பட்டபோது, அ.தி.மு.க.வை மீண்டும் ஒன்றிணைக்க ஜெயலலிதாவுடன் உறுதுணையாக இருந்து பாடுபட்டவர் சசிகலா. இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்கவும் உறுதுணையாக இருந்தார். 1996-ம் ஆண்டு ஜெயலலிதாவை பழிவாங்க, அப்போதைய தி.மு.க. ஆட்சியாளர்கள் தொடர்ந்த பொய் வழக்குகளில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சசிகலா 11 மாதம் சிறை வைக்கப்பட்டார்.

சசிகலாவுக்கு அங்கீகாரம்

ஜெயலலிதாவே ‘சசிகலா எனக்காக மிகுந்த சிரமங்களை அனுபவித்து இருக்கிறார். என்னுடன் பிறக்காத சகோதரி அவர். என் அம்மாவின் இடத்தை என் வாழ்வில் நிரப்பிய பெண் அவர்’, என்று கூறியிருக்கிறார்.

எனவே அ.தி.மு.க. சட்டவிதி 20 பிரிவு 2-ல் கூறப்பட்டுள்ளதுபடி, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படும் வரை, வி.கே.சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நியமித்து இந்த பொதுக்குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது.

பொதுச்செயலாளர் என்ற முறையில் அ.தி.மு.க.வை நடத்திவர அவருக்கு இந்த பொதுக்குழு ஒருமனதாக அங்கீகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றுகிறது.

வெற்றித் திருமகளாய் விடைபெற்றார்

* ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்ட ஜனாதிபதி, பிரதமர், தமிழக கவர்னர், கேரளா கவர்னர், பிற மாநில முதல்-மந்திரிகள், காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு இந்த பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது. எம்.ஜி.ஆர். நினைவிடத்திலேயே ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க சசிகலா வைத்த வேண்டுகோளை ஏற்று, அனுமதி அளித்த தமிழக அரசு, மாநகராட்சிக்கு நன்றி.

* ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் தேவையான ராணுவ உதவிகளையும், வாகனங்களையும் மற்றும் பிற உதவிகளையும் செய்துகொடுத்த மத்திய அரசுக்கு இந்த பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது.

* ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தபடியே அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளின் வெற்றி எட்டுத்திக்காக அமையவேண்டும் என்று கூறிய ஜெயலலிதாவின் வார்த்தையை ஏற்று, 3 தொகுதிகளிலும் வெற்றியை கொடுத்த வாக்காளர்களுக்கும், தொண்டர்களுக்கும் இந்த பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது. தன் வாழ்நாளின் நிறைவு நேரத்தில் கூட வெற்றித் திருமகளாய் விடைபெற்றார் என்ற சரித்திர பதிவை அளித்த அனைவருக்கும் நன்றி.

‘பாரத ரத்னா’ விருது

* விவசாயிகளுக்காக அரும்பாடுபட்ட ஜெயலலிதாவின் பிறந்தநாளை தேசிய விவசாயிகள் தினம் என்று அறிவிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் ஜெயலலிதாவின் திருவுருவ வெண்கல சிலை நிறுவப்பட வேண்டும் என்றும் மத்திய அரசை இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

* செயற்கரிய செயல்கள் பலவற்றை பார்போற்றும் வகையில் செய்துகாட்டிய சமூக நீதி காத்த வீராங்கனையும், மகளிர் குல திலகமுமான ஜெயலலிதாவுக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட வேண்டும் என்று இந்த பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

* பஞ்சம் நீக்கி, பட்டினி தீர்த்து எல்லோருக்கும் உணவளித்த ஜெயலலிதாவின் மேன்மைக்காக நோபல் அமைதி பரிசு வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது, பிலிப்பைன்ஸ் நாட்டின் ‘ரமோன் மக்சேசே விருது’ வழங்கவும் இந்த பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றுகிறது.

‘மக்கள் பணி ஆண்டு’

* எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டினை ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையும் வகையில் ‘மக்கள் பணி ஆண்டாக’ தொண்டாற்ற பொதுக்குழு தீர்மானிக்கிறது.

* ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு உழைத்து எதிரிகளை வீழ்த்தி முன்னேற்றப் பாதையில் நடைபோட ஜெயலலிதா மீது உறுதி ஏற்க இந்த பொதுக்குழு தீர்மானிக்கிறது.

* அ.தி.மு.க.வை வழிநடத்த ஜெயலலிதா நம்மிடையே இல்லாத இந்த சூழலில் கட்சியின் எதிர்காலத்தை வழிநடத்த அவருடன் 33 ஆண்டுகளாக சேர்ந்து கட்சிப் பணியாற்றுவதில் அனுபவம் பெற்று, அவரை அறிந்து வைத்திருந்த வி.கே.சசிகலாவிடம் கட்சியின் தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

அ.தி.மு.க. வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த நேரத்தில் தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு இடம் தராமல் அ.தி.மு.க.வினர் அனைவரும் கட்டுக்கோப்போடு, தலைமைக்கு விசுவாசத்தோடு பணியாற்றிட இந்த பொதுக்குழு உறுதி ஏற்கிறது.

எம்.ஜி.ஆரை ஜெயலலிதா வடிவில் கண்டோம். ஜெயலலிதாவை சசிகலா வடிவில் கண்டு கட்சி பணியை தொடர்ந்து ஆற்றுவோம் என்று இந்த பொதுக்குழு சூளுரைக்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறவேற்றப்பட்டன.

மறைந்த அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு இந்த பொதுக்குழுவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.