Breaking News
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நாளை பதவி ஏற்கிறார்

பொதுச்செயலாளராக சசிகலா நாளை (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். முன்னதாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

ஆலோசனை கூட்டம்

சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா பெயரை முன்மொழிந்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்க சசிகலாவும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்பது குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் சசிகலா பொறுப்பேற்கும் நாளில் செய்யவேண்டிய ஏற்பாடுகள், கட்சி விழா பணிகள் குறித்து சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்களுடன், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் விவாதித்தனர்.

நாளை பதவி ஏற்பு

அந்தவகையில் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக சசிகலா நாளை (சனிக்கிழமை) பதவி ஏற்க இருப்பதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக கட்சி அலுவலகத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்க இருக்கும் சசிகலா இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளார் என்று அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்க இருப்பதால் ராயப்பேட்டை கட்சி அலுவலகம் மீண்டும் உற்சாகம் அடைய தொடங்கி இருக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.