‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்துக்கு தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஜூன் 23-ம் தேதி வெளியீட்டை உறுதிசெய்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. யுவன் இசையமைத்துள்ள படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார்.
3 விதமான தோற்றங்களில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. அதில் மதுரை மைக்கேல் மற்றும் அஸ்வின் தாத்தா ஆகிய தோற்றங்கள் மட்டுமே முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளது. இதர தோற்றங்களில் உள்ள கதாபாத்திரத்தை வைத்து 2-ம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது. மேலும், படத்தின் வெளியீடு ஜூன் 23 என அறிவிக்கப்பட்டது. தணிக்கைக்கு இணையம் வழியாக பார்க்கக் கோரியதால் சிறிது தாமதம் ஏற்பட்டது. ஆகையால், ஜூன் 23-ம் தேதி வெளியாகுமா என்ற குழப்பம் விநியோகஸ்தர்கள் மத்தியில் நீடித்து வந்தது.
இந்நிலையில், படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியதால் வெளியீட்டு பிரச்சினை முடிவுக்கு வந்தது. தற்போது ஜூன் 23-ம் வெளியீடு என்பதால் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.