Breaking News
‘கும்ப்ளேவும் விராட் கோலியும் கடந்த 6 மாத காலமாகவே பேசிக்கொள்ளும் சுமுக நிலையில் இல்லை’

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் அனில் கும்ப்ளேயும் கடந்த 6 மாத காலமாகவே பேசிக்கொள்ளும் சுமுக உறவுகளில் இல்லை என்று தெரியவந்துள்ளது.

அதே போல் கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சச்சின், கங்குலி, லஷ்மண்) கூட நேரடியாக கும்ப்ளேவுக்கு பதவிக்கால நீட்டிப்புக்கு பச்சைக் கொடி காட்டவில்லை என்பதே வெளியாகியுள்ள மற்றொரு செய்தியாகும்.

லண்டனில் இந்த விவகாரங்களின் போது உடன் இருந்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “கிரிக்கெட் ஆலோசனை குழு கும்ப்ளேவுக்கு பதவிக்கால நீட்டிப்பு வழங்கியது உண்மைதான், ஆனால் அதில் நிபந்தனை அடங்கியுள்ளது. அனைத்து நிலுவைப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்றால் கும்ப்ளேவை நீட்டிக்கலாம் என்று கருதப்பட்டது” என தெரிவித்தார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி முடிந்தவுடன் லண்டனில் 3 தனித்தனியான சந்திப்புகள் நிகழ்ந்துள்ளது, முதலில் கும்ப்ளே பிசிசிஐ முதன்மை அதிகாரி மற்றும் சச்சின், கங்குலி, லஷ்மண் குழுவை சந்தித்தார், பிறகு கோலி இவர்களைச் சந்தித்தார், அதன் பிறகு கும்ப்ளே, கோலி இருவருமே இவர்களைச் சந்தித்தனர். ஆனால் இந்தச் சந்திப்பு பயனற்று விரயமானது என்கிறார் அந்த அதிகாரி.

“இருவரும் டிசம்பர் மாதம் இங்கிலாந்து தொடர் முடிந்த பிறகு பேசிக்கொள்ளவில்லை. கடந்த 6 மாதங்களாக இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளும் நிலையில் இல்லை என்பது அதிர்ச்சி தரும் விஷயமாக உள்ளது. ஞாயிறன்று இறுதிப் போட்டிக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நிர்வாகிகளை சந்தித்த போது இருவருமே ஒத்துவராது என்று கூறிவிட்டனர்,

அனில் கும்ப்ளேவிடம் தனியாகப் பேசிய போது விராட்டுடன் பிரச்சினையில்லை என்றார். ஆனால் கோலிக்கு இவரிடம் உள்ள பிரச்சினையின் பகுதிகளை விளக்கியதும் கும்ப்ளே இதெல்லாம் ஒரு சமாச்சரமேயல்ல என்று கூறிவிட்டார்.

இருவருக்கும் பிரச்சினைகள் இருந்திருக்கும் போது ஒருவரது பிரச்சினை மற்றவருக்கு ‘இதெல்லாம் ஒரு சமாச்சாரமே அல்ல’ என்பது போல் இருந்திருக்கிறது. அப்படியென்றால் இருவரும் தனிப்பட்ட முறையில் பேசித்தீர்த்துக் கொண்டிருக்கலாம், ஆனால் இருவரும் சேர்ந்து சந்திக்கும் போது பிரச்சினை சீர் செய்ய முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது. அனில் கும்ப்ளேவுக்கு பார்படாஸுக்கு டிக்கெட் கூட புக் செய்யப்பட்டு விட்டது. ஆனால் கும்ப்ளேவுக்கு அனைத்தும் முடிந்து விட்டது என்று தெரிந்திருந்தது” என்றார் அந்த அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம்.

பிரச்சினை என்னவென்று குறிப்பிட்டு சொல்ல முடியுமா என்று பிடிஐ அந்த அதிகாரியிடம் கேட்ட போது, விராட் கோலி தனக்குரிய பிரதேசத்தில் அனில் கும்ப்ளே தலையிட்டதாகக் கருதுகிறார், என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.