Breaking News
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: நம்பர் ஒன் வீரரை வீழ்த்தினார் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்- பி.வி.சிந்து, சாய்னா நெவால் கால் இறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் நம்பர் ஒன் வீரரான தென் கொரியாவின் சன் வான் ஹோவை வீழ்த்தி இந்தியாவின் கிடாம்பி காந்த் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் பிரிவில் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் கால் இறுதிக்குள் நுழைந்தனர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 11-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி காந்த், உலகத் தரவரிசையில் முதல் நிலை வீரரான தென் கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்த்து விளையாடினார்.

இதில் முதல் செட்டை காந்த் 15-21 என இழந்தார். ஆனால் அடுத்த இரு செட்களிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 21-13, 21-13 என கைப்பற்றினார். 57 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காந்த் 15-21, 21-13, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறி னார்.

கடந்த வாரம் நடைபெற்ற இந்தோனேஷிய ஓபன் தொடரிலும் சன் வான் ஹோவை, காந்த் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. கால் இறுதியில் காந்த், தனது சகநாட்டை சேர்ந்த சாய் பிரணீத்துடன் மோத உள்ளார்.

தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள சாய் பிரணீத் தனது 2-வது சுற்றில் 25-ம் நிலை வீரரான சீனாவின் ஹூவாங் யுஜியாங்கை 21-15, 18-21, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 4 நிமிடங்கள் நடைபெற்றது.

சிந்து, சாய்னா வெற்றி

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையும், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான இந்தியாவின் பி.வி.சிந்து, 22-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஷென் ஜியாஷினை எதிர்த்து விளையாடினார். 46 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-13, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 16-ம் நிலை வீராங்கனையான இந்தியா வின் சாய்னா நெவால், 26-ம் நிலை வீராங்கனையான மலேசியாவின் சோனியா ஷியாவை எதிர்கொண் டார். இதில் முதல் செட்டை சாய்னா 21-15 என எளிதாக கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் சோனியா கடும் நெருக்கடி கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் 20-20 என சமநிலையில் இருந்த போது சரியான இடத்தில் பந்துகளை பிளேசிங் செய்து இந்த செட்டை சோனியா 22-20 என கைப்பற்றினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட் பரபரப்பானது. இந்த செட்டில் சாய்னா தொடக்கத்திலேயே 4-0 என ஆதிக்கம் செலுத்தினார்.

எனினும் சோனியா 7-8 என நெருங்கி வந்தார். ஆனால் சோனியா அடுத்த ஒரு புள்ளியை சேர்ப்பதற்குள் சாய்னா 16-8 என வலுவான முன்னிலைக்கு சென்றார். முடிவில் இந்த செட்டை சாய்னா 21-14 என தன்வசப்படுத்தினார். 62 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாய்னா 15-21, 22-20, 14-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ரெட்டி ஜோடியும், மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடியும் தங்களது 2-வது சுற்றில் தோல்வி அடைந்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.