Breaking News
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. இதில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியுடன் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் மோதுகிறது. கவுன்டி கிரிக்கெட் மைதானமான டெர்பியில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கடந்த சில வருடங்களாகவே சிறந்த முன்னேற்றம் கண்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற 4 நாடுகள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி கோப்பை வென்றிருந்தது.

2005-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் 2-வது இடம் பிடித்திருந்த இந்திய அணி மிதாலி ராஜ் தலைமை யில் களமிறங்குகிறது. சமீபத்தில் 100 ஆட்டங்களில் அணியை வழிநடத்திய 3-வது வீராங்கனை என்ற பெருமையை மிதாலி ராஜ் பெற்றிருந்தார். தொடர்ச்சியாக 6 அரை சதங்கள் விளாசி உலக சாதனை படைத்துள்ள அவர், உலகக் கோப்பை தொடரில் அரை இறுதிக்கு முன்னேறுவதே இந்திய அணியின் முதல் இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற 4 நாடுகள் கிரிக்கெட் தொடரில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான தீப்தி சர்மா, பூனம் ராவத் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தது. இந்த ஜோடியிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.

பேட்டிங்கில் மோனா மேஷ்ரம், ஹர்மான்பிரித் கவுர், ஸ்மிருதி மந் தானா ஆகியோர் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக உள்ளனர்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்கள் கைப்பற்றி சாதனை படைத்துள்ள ஜுலன் கோஸ்வாமி, பந்து வீச்சு துறைக்கு தலைமை வகிக்க உள் ளார். சுழற் பந்து வீச்சில் ஏக்தா பிஷ்ட் எதிரணிக்கு சவால் கொடுக்க தயாராக உள்ளார்.

இந்திய அணி கடைசியாக விளையாடிய 4 ஒருநாள் போட்டி தொடர்களையும் வென்றுள்ளதால் உலகக் கோப்பை தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது.

உலகக் கோப்பை தொடரில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு கடும் சவால் கொடுக்கும் என்றே கருதப்படுகிறது. இம்முறையும் அந்த அணி உள்ளூர் சாதகத்துடன் தொடரை எதிர்கொள்கிறது. ஏனெனில் ஏற்கெனவே இரு முறை தொடரை நடத்திய போது இங்கிலாந்து அணி தான் கோப்பையை வென்றிருந்தது.

நட்சத்திர வீராங்கனையான சாரா டெய்லர், கேப்டன் ஹீத்தர் நைட் அசத்த தயாராக உள்ளார். அபாயகரமான வேகப் பந்து வீச்சு வீராங்கனையான கேத்ரின் பர்ன்ட், நடாலி ஷிவெர் ஆகியோர் நெருக்கடித்தரக்கூடும்.

மிதாலியின் துணிச்சலான பதில்

பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இந்தியா, பாகிஸ்தான் அணிகளில் உங்களுக்குப் பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்வியை இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜிடம் ஒருவர் எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மிதாலி ராஜ் மிகவும் கூர்மையாக,

“ஆண் கிரிக்கெட் வீரர்களிடம் இதே கேள்வியைக் கேட்பீர்களா? அதாவது அவர்களுக்குப் பிடித்த பெண் கிரிக்கெட் வீராங்கனை யார் என்று கேட்பீர்களா?” என்று பதில் கேள்வி கேட்டார்.

“ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கும் எங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தொலைக்காட்சியில் நாங்கள் ரெகுலர் கிடையாது. கடைசி 2 உள்நாட்டுத் தொடர்களின் போது பிசிசிஐ நேரடி ஒளிபரப்பு முயற்சி செய்தது, சமூக வலைத்தளங்களிலும் ஓரளவுக்கு அங்கீகாரம் உள்ளது. ஆனால் இன்னமும் அங்கீகாரம் தேவை என்று உணர்கிறேன்” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.