Breaking News
+2 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகள் ஓர் அறிமுகம்!

தற்போது அலோபதி மருத்துவமே உலகில் பெருமளவு மக்களின் நோய்தீர்ப்பதில் முன்னணியில் உள்ளது. உலக மக்கள்தொகையில் அலோபதி மருத்துவர்களின் தோராய எண்ணிக்கை 1.5:1000. இந்திய அளவில் 1:1700 எனும் விகிதத்திலுள்ளது. 2031 ஆம் ஆண்டுக்குள் 1:1000 எனும் அளவில் உயர்த்த இந்திய மருத்துவக்கழகம் முயற்சியெடுத்துவருகிறது.

மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புக்கான (எம்.பி.பி.எஸ்) இடங்களின் எண்ணிக்கை அதிகரித்தும், ஆங்கில வழி மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான விதிமுறைகளைத் தளர்த்தி, புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதியை வழங்கியும் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான இடங்களை ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும், இந்தியாவில் எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகத்தான் இருக்கின்றன.

ஆங்கில வழி மருத்துவப் படிப்புகள்
தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்காகத் தொடங்கிய தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் இளநிலை ஆங்கில மருத்துவப் படிப்பில் (M.B.B.S) 21 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2600, 16 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 2110, என மொத்தம் 37 கல்லூரிகளில் 4710 காலியிடங்கள் உள்ளன. இளநிலை பல் மருத்துவப் பட்டப்படிப்பில் (B.D.S) அரசு கல்லூரியில் 100, சுயநிதிக்கல்லூரி களில் 1710 என்று மொத்தம் 1810 காலியிடங்கள் உள்ளன.

தேசியத் தகுதித் தேர்வு
ஆங்கில மருத்துவப் பட்டப்படிப்பு (M.B.B.S), பல் மருத்துவப் பட்டப்படிப்பு (B.D.S) ஆகிய வற்றில் இடம்பிடிக்க +2 வில் உச்ச மதிப்பெண்களைப் பெற போராடிக்கொண்டிருந்த மாணவர்கள், National Eligibility and Entrance Test எழுதி, அதிலும் அதிக மதிப்பெண்களைப் பெற்றாகவேண்டும்.

நுழைவுத்தேர்வு மதிப்பெண்களில் முதன்மை பெற்றவர்களுக்கு மத்திய/மாநில அரசுகளின் இட ஒதுக்கீட்டு விதிகளைப் பின்பற்றி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். இரு படிப்புகளிலும் இடம் கிடைக்காத மாணவர்கள், மருத்துவம் சார்ந்த அறிவியல் (Allied Medical Science) பட்டப்படிப்புகளிலோ சேர்ந்து மருத்துவச் சேவையாற்றலாம்.

பிற மருத்துவப் பட்டப்படிப்புகள்
ஆயுர்வேதம், ஓமியோபதி, இயற்கை மற்றும் யோகா அறிவியல், சித்தா, யுனானி எனும் 5 மருத்துவப் பட்டப்படிப்புகளைப் படித்தும் மருத்து வராகப் பணியாற்றலாம். தமிழ்நாட்டில் ஆயுர்வேத மருத்துவப் பட்டப்படிப்பிற்கு (Bachelor of Ayurvedic Medicine and Surgery – B.A.M.S) அரசுக் கல்லூரியில் 60, ஐந்து சுயநிதிக் கல்லூரி களில் 230, என மொத்தம் ஆறு கல்லூரிகளில் 290 காலியிடங்களும், ஓமியோபதி மருத்துவப் பட்டப்படிப்பிற்கு (Bachelor of Homoeopathic Medicine and Surgery – B.H.M.S) அரசுக் கல்லூரியில் 50, ஒன்பது சுயநிதிக் கல்லூரிகளில் 560 என்று மொத்தம் பத்து கல்லூரிகளில் 610 காலியிடங்களும், இயற்கை மற்றும் யோகா அறிவியல் மருத்துவப் பட்டப்படிப்பிற்கு (Bachelor of Naturopathy and Yogic Sciences – B.N.Y.S) அரசுக் கல்லூரியில் 60, சுயநிதிக் கல்லூரிகள் மூன்றில் 240 என்று மொத்தம் 4 கல்லூரிகளில் 300 காலியிடங்களும், சித்தா மருத்துவப் பட்டப்படிப்பிற்கு (Bachelor of Siddha Medicine and Surgery- B.S.M.S) இரண்டு அரசுக் கல்லூரிகளில் 160, ஆறு சுயநிதிக் கல்லூரிகளில் 310 என்று மொத்தம் எட்டு கல்லூரிகளில் 470 இடங்களும், யுனானி வழி மருத்துவப் பட்டப்படிப்பிற்கு (Bachelor of Unani Medicine and Surgery B.U.M.S) அரசுக் கல்லூரியில் 60, என ஐந்து வகையான மருத்துவப் பட்டப்படிப்புகளில் மொத்தம் 1730 காலியிடங்கள் உள்ளன.

மருத்துவம் சார்ந்த அறிவியல் பட்டப்படிப்புகள்
மருத்துவம் சார்ந்த இளநிலை அறிவியல் படிப்புகளாகச் செவிலியர் பட்டப்படிப்புகள் (B.Sc (Nursing) 5 அரசுக் கல்லூரிகள், 158 சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் 6 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும், மேம்பட்ட அடிப்படைச் செவிலியர் பட்டப்படிப்புகள் (Post Basic B.Sc (Nursing)) 2 அரசுக் கல்லூரிகள் மற்றும் 66 சுயநிதிக் கல்லூரிகளிலும், மருந்தாளுமைப் பட்டப்படிப்புகள்; 2 அரசுக்கல்லூரிகள், 38 சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் 4 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும், இயன்முறை மருத்துவப் பட்டப்படிப்புகள் (Bachelor of Physiotherapy – B.P.T) 2 அரசுக் கல்லூரிகள், 29 சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் 4 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும், தொழில்வழி மருத்துவப் பட்டப்படிப்புகள் (B.O.T); 2 சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் 3 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் உள்ளன. இந்த மருத்துவத் தொழில்முறைப் படிப்புகளில் 10 ஆயிரம் இடங்கள் உள்ளன.

இளநிலை அறிவியல் படிப்புகள்
பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் விபத்து மற்றும் அவசரச் சிகிச்சைத் தொழில்நுட்பம் (Accident & Emergency Care Technology), கேட்டலியல் மற்றும் பேச்சுமொழி நோயியல் (Audiology & speech Language Pathology), இதயத் தொழில்நுட்பம் (Cardiac Technology), இதயம் நுரையீரல் மருந்து உட்செலுத்துதல் பராமரிப்புத் தொழில்நுட்பம் (Cardio Pulmonary Perfusion Care Technology), தீவீரப் பராமரிப்பு (Critical Care Technology), கூழ்மப் பிரிப்புத் தொழில்நுட்பம் (Dialysis Technology), நரம்பு மின் உடலியங்கியல் (Neuro Electrophysiology), மருத்துவப் பரிசோதனைத் தொழில்நுட்பம் (Medical Laboratory Technology), மருத்துவச் சமூகவியல் (Medical Sociology), அணு ஆற்றல் மருந்துத் தொழில்நுட்பம் (Nuclear Medicine Technology), அறுவை அரங்கம் மற்றும் உணர்வகற்றல் தொழில்நுட்பம் (Operation Theatre & Anaesthesia Technology), பார்வை அளவையியல் (Optometry), மருத்துவர் உதவியாளர் (Physician Assistant), செயற்கை உறுப்பு பொருத்தலியல் மற்றும் நேர்த்தியல் (Prosthetics & Orthotics), கதிரியல் மற்றும் இயல்நிலை வரைவுத் தொழில்நுட்பம் (Radiology Imaging Technology), கதிரியக்கச் சிகிச்சைத் தொழில்நுட்பம் (Radiotherapy Technology), மருத்துவப் பதிவேடுகள் அறிவியல் (Medical Record Science), சுவாசப் பராமரிப்புத் தொழில்நுட்பம் (Respiratory Therapy) போன்ற பல்வேறு தலைப்புகளில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

இதில் 5 ஆயிரம் காலியிடங்களுள்ளன. மருத்துவப் பதிவேட்டு அறிவியல் பட்டப்படிப்பு (Bachelor of Medical Record Science – B.M.R.Sc.) ஒரு கல்லூரியிலும், மருத்துவப் பரிசோதனைத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (Bachelor of Science in Medical Laboratory Technology – B.Sc.(MLT)) ஒரு கல்லூரியிலும், பார்வை அளவையியல் பட்டப்படிப்பு (Bachelor of Science in Optometry – B.Sc ( Optometry)) ஒரு கல்லூரியிலும் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றில் 100 இடங்கள் வரை இருக்கின்றன.

இதுபோல் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவம் தொடர்பான பட்டயப்படிப்புகளும் (Diploma Courses), பற்கார நீக்குநர் (Dental Hygienist), பல் இயந்திரக் கைவினைஞர் (Dental Mechanics), பல் இயக்க அறை உதவியாளர் (Dental Operating Room Assistant) போன்ற பல் மருத்துவப் படிப்புகளும் உள்ளன.

மேலும் தகவல்களுக்கு பிளஸ் டூ தேர்வு எழுதித் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்கள், மேற்காணும் மருத்துவம் சார்ந்த தொழில்முறைப் படிப்புகள், இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் எந்தக் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கின்றன? மாணவர் சேர்க்கை நடைமுறைகள் என்ன போன்ற கூடுதல் தகவல்களை அறிய https://www.tnmgrmu.ac.in/

நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவப் படிப்புகள்
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 10 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் ஆங்கில மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான இடங்கள் இருக்கின்றன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இருக்கும் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான இடங்களில் சேர்க்கை பெறுவதற்கும் National Eligibility and Entrance Test இல் பெறும் தகுதி மதிப்பெண்கள் தேவை.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டப்படிப்பு களுக்கான கட்டணம் குறையலாம் என்பது கல்வியாளர்கள் கருத்து. நிகர்நிலைப் பல்கலையில் செவிலியர், மேம்பட்ட அடிப்படைச் செவிலியர், இயன்முறை மருத்துவம், தொழில்வழி மருத்துவம், மருந்தாளுமை உள்ளிட்ட இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகளுள்ளன. இதுபோல் பல்வேறு தலைப்பு களிலான மருத்துவம் சார்ந்த இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகளும், பட்டயப் படிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் மருத்துவத்துறையில் வேலைவாய்ப்பு கேரண்டி!

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.