Breaking News
பி.டெக் படிப்புடன் வேலைவாய்ப்பு தரும் தேசியப் பாதுகாப்புக் கல்வி நிறுவனம் மற்றும் கடற்படைக் கல்வி நிறுவனத் தேர்வுகளுக்கு ரெடியா?

இந்திய அரசின் தேசியப் பாதுகாப்புக் கல்வி நிறுவனம் (National Defence Academy) மற்றும் கடற்படைக் கல்வி நிறுவனம் (Naval Academy) ஆகியவற்றில் இடம் பெற்றிருக்கும் வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்நுட்பப் பட்டப் படிப்புகளில் (B.Tech) மாணவர் சேர்க்கைக்கான தேர்வு (National Defence Academy & Naval Academy Examination (II), 2017) அறிவிப்பினை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது.

இடங்கள்
தேசியப் பாதுகாப்புக் கல்வி நிறுவனத்தில் (National Defence Academy) இராணுவம் (Army) பிரிவில் 208 இடங்கள், கடற்படை (Navy) பிரிவில் 55 இடங்கள், வான்படை (Air Force) பிரிவில் 72 இடங்கள் என்று 335 இடங்களும், கடற்படைக் கல்வி நிறுவனத்தில் (Naval Academy) 55 இடங்களும் என்று மொத்தம் 390 இடங்கள் இருக்கின்றன.

வயது மற்றும் உடற்தகுதி
இத்தேர்வுக்கு இந்தியக் குடியுரிமையுடைய திருமணமாகாத 2-1-1999 முதல் 1-1-2002 வரையிலான தேதிக்குள் பிறந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தேசியப் பாதுகாப்புக் கல்வி நிறுவனம் மற்றும் கடற்படைக் கல்வி நிறுவனத்தின் உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி
தேசியப் பாதுகாப்புக் கல்வி நிறுவனத்தில் (National Defence Academy) இராணுவம் (Army) பிரிவுச் சேர்க்கைக்கு பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசியப் பாதுகாப்புக் கல்வி நிறுவனத்தின் கடற்படை (Navy) பிரிவு, வான்படை (Air Force) பிரிவு மற்றும் கடற்படைக் கல்வி நிறுவனச் சேர்க்கைகளுக்கு பிளஸ் டூவில் கணிதம் (Mathematics) மற்றும் இயற்பியல் (Physics) பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தக் கல்வியாண்டில் பிளஸ் டூ தேர்வு எழுதவிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 24-6-2018 அன்று பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

விண்ணப்பம்
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் https://upsconline.nic.in/upsc/mainmenu2.php எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக, ரூ.100/-ஐ செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் குறிப்பிட்ட சில பணிகளில் இருப்பவர்களது பிள்ளைகளுக்கு (SC/ST candidates / Sons of JCOs / NCOs) விண்ணப்பக் கட்டணமில்லை. விண்ணப்பக் கட்டணத்தை நேரடியாகப் பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் அல்லது இணையப் பணப்பரிமாற்ற முறைகளிலும் செலுத்தலாம். விண்ணப்பிக்க இறுதி நாள்: 30-6-2017.

நுழைவுத்தேர்வு
மேற்காணும் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்குத் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உட்பட இந்தியா முழுவதும் 41 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 10-9-2017 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான அனுமதிச் சீட்டு தேர்வு நாளுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பாக இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த அனுமதிச் சீட்டினைத் தரவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சேர்க்கை
எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களிலிருந்து மத்தியப் பணியாளர் தேர்வாணையம் இத்தேர்வுக்கு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றவர்கள் கொண்ட பட்டியலை வெளியிடும். இப்பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு உளவியல் திறனாய்வுச் சோதனை (Psychological Aptitude Test) மற்றும் நுண்னறிவுச் சோதனை (Intelligence Test) எனும் இரு வழிகளிலான நேர்காணல் நடத்தப்பட்டுப் பயிற்சிக்கான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதியான மாணவர்களுக்கு, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேசியப் பாதுகாப்புக் கல்வி நிறுவனம் அல்லது கடற்படைக் கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்பப் பயிற்சி (B.Tech) அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பும் அளிக்கப்படும். நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்களுக்கு சில விதிமுறைகளுக்குட்பட்டு மூன்றடுக்கு குளிர்சாதன வசதியுடைய தொடருந்துப் பயணத்திற்கான பயணத்தொகை அளிக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சிகள் 2-7-2018 முதல் தொடங்கும்.

கூடுதல் தகவல்களுக்கு, மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் http://www.upsc.gov.in/ இணையதளத்தை அணுகலாம். அல்லது டெல்லி யிலுள்ள மத்தியப் பணியாளர் தேர்வாணையத்திற்கு நேரடியாகச் சென்று, அங்கு ‘சி’ வாசலில் (C Gate) அமைக்கப்பட்டிருக்கும் தகவல் சேவை மையத்தில் தகவல்களைக் கேட்டுப் பெறலாம். தேர்வாணையத்தின் 011 – 23385271 / 011 – 23381125 / 011 – 23098543 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.