Breaking News
இந்தியாவின் நிதியாண்டு கணக்கு மாறுகிறது; 150 ஆண்டு நடைமுறை முடிவு

இந்தியாவின் நிதியாண்டு கணக்கை, ஜன., – டிச., ஆக மாற்றுவதற்கு, மத்திய அரசுக்கு, உயர்மட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது.

உயர்மட்டக் குழு:

இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், பிரிட்டன் வழக்கப்படி, 1867ல், ஏப்., – மார்ச் நிதியாண்டை அறிமுகப்படுத்தினர். இந்நிலையில், ‘நிடி ஆயோக்’ அமைப்பு, ‘நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, குறிப்பாக, வேளாண் துறை சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, நிதியாண்டை, ஜன., – டிச., ஆக மாற்றுவது நல்லது’ என, தெரிவித்தது. இது குறித்து ஆராய, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சார்யா தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.

பரிந்துரை:

இது குறித்து, சங்கர் ஆச்சார்யா கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளின் நிதியாண்டு, ஏப்., – மார்ச் ஆக உள்ளது. வேளாண் துறையில், ஜன., – மார்ச் வரை, ரபி பருவம்; ஏப்., – அக்., வரை, கரீப் பருவம்; ஜூலையில் அறுவடை துவக்கம் என்ற நடைமுறைகள் உள்ளன. பங்குச் சந்தைகளில், தீபாவளியை தொடர்ந்து கார்த்திகையில் துவங்கும், ‘சம்வாட்’ ஆண்டு, நிதியாண்டாக கடைபிடிக்கப்படுகிறது.

அவற்றின் அடிப்படையில், நிதியாண்டை மாற்றுவதில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் ஆராயப்பட்டன. முடிவில், நிதியாண்டை, ஜன., – டிச., ஆக மாற்றுவதில் உள்ள, பல்வேறு வசதிகளை கருத்தில் கொண்டு, அதை செயல்படுத்த, மத்திய அரசிடம் பரிந்துரைத்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

நவம்பரில் பட்ஜெட் தாக்கல்:

மத்திய அரசு, 150 ஆண்டுகளாக பின்பற்றி வரும் நிதியாண்டை மாற்றினால், நவம்பரில் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். பார்லி., கூட்டத்தொடர்களிலும் மாற்றம் மேற்கொள்ளப்படும். மத்திய அரசை பின்பற்றி, மாநில அரசுகளும் புதிய நிதியாண்டு நடைமுறைக்கு மாறும். ம.பி., அரசு, சமீபத்தில், நிதியாண்டை, காலண்டர் ஆண்டுக்கு மாற்றி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. சீனா, ரஷ்யா, மெக்சிகோ உள்ளிட்ட, 156 நாடுகளில், ஜன., – டிச., நிதியாண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.