பொறுமையா இருங்க, விரைவில் முடிவு சொல்றேன்.. தீபா அறிவிப்பு
அம்மா அவர்கள் விட்டுச் சென்ற நற்பணிகளை தொடரவேண்டும் என்ற எண்ணத்தில் விரைவில் என்னுடைய முடிவை அறிவிப்பேன் அதுவரைக்கும் அனைவரும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஜெயலலிதா மரணமடைந்து 30 நாட்கள் முடிவடைந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த தொண்டர்கள் தி. நகரில் உள்ள தீபாவின் வீடு முன்பு குவிந்தனர்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய தீபா, தான் அரசியலுக்கு வருவேன் என்றும் தன்னை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தீபா, அரசியலுக்கு வருவது பற்றிய முடிவை வெகு விரைவில் அறிவிப்பேன் என்றார்.
சசிகலா பொதுச்செயலாளர் ஆனது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பவே அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்றார்.
அதிமுகவை கைப்பற்றுவீர்களா? அல்லது புதிய கட்சி தொடங்குவீர்களா என்று கேள்வி கேட்டதற்கு பதிலளித்த தீபா, இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை என்றும் தொண்டர்களிடம் கலந்து பேசி அவர்களி கருத்தை அறிந்து எனது நிலையை தெரிவிப்பேன் என்று கூறினார்.
வருங்காலத்தை மனதில் வைத்து எனது முடிவை அறிவிப்பேன் என்று கூறிய தீபா, தொண்டர்கள் சற்று பொறுமை காக்கவேண்டும் என்று கூறினார்.
சசிகலா முதல்வராகப் போவதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தீபா, சசிகலா முதல்வராவார் என்பது யூகம்தான். அவ்வாறு முதல்வரானால் தன்னுடைய விமர்சனம் இருக்கும் என்றும் தெரிவித்தார்.