விவசாயிகளுக்காக தொண்டு நிறுவனம் தொடங்குகிறார் ஜி.வி.பிரகாஷ்
இசை அமைப்பாளராக இருந்து ஹீரோவானவர் ஜி.வி.பிரகாஷ். இசை அமைப்பதை விட அதிக படங்களில் நடித்து வருகிறார். புரூஸ்லீ, 4ஜி, அடங்காதே, செம, சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு தடை எதிர்ப்பு போராட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டார். போராட்டக்காரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக “கொம்பு வச்ச சிங்கம்டா…” என்ற பாட்டையும் பாடி வெளியிட்டார்.இதன் அடுத்து கட்டமாக விவசாயிகள் நலனில் குதிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். கடும் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து வருவது அவர் மனதை மிகவும் பாதித்துள்ளது.
அதனால் விவசாயிகள் நலனை முன்னிறுத்தி தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளார். ஒரு படத்திற்கு தான் வாங்கும் சம்பளத்தை (சுமார் 3 கோடி) அப்படியே அந்த தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்க இருக்கிறார். “சினிமாவில் வாங்கும் சம்பளம் மக்கள் கொடுத்தது. அதில் ஒரு பகுதியை மக்களுக்கே திருப்பி தருவதுதான் இது. இப்போது விவசாயிகள் நிலைதான் கவலை அளிப்பதாக உள்ளது. அதற்காகத்தான் இந்த முயற்சி” என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
நன்றி : தினமலர்