அதிவேக 250 டெஸ்ட் விக்கெட்டுகள்: அஸ்வின் புதிய சாதனை; வ.தேசம் 388 ஆல் அவுட்
ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் 45 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அஸ்வின் புதிய சாதனை படைக்க வங்கதேசம் தன் முதல் இன்னிங்ஸில் 388 ரன்களுக்குச் சுருண்டது.
டெனிஸ் லில்லி 48 டெஸ்ட் போட்டிகளில் 250 டெஸ்ட் விக்கெட்டுகள் மைல்கல்லையும், டேல் ஸ்டெய்ன் 49 டெஸ்ட்களில் 250 விக்கெட்டுகள் மைல்கல்லையும் எட்ட இந்திய சுழற்பந்து நட்சத்திரம் அஸ்வின் 45 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.
அதிக டெஸ்ட் விக்கெட்டுகளுக்கான உலகசாதனையை வைத்துள்ள மேதை முத்தையா முரளிதரனே 45 டெஸ்ட் போட்டிகளில் 218 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்பஜன் சிங் 199 விக்கெட்டுகளை 45 டெஸ்ட்களில் கைப்பற்றியுள்ளார்.
ரங்கனா ஹெராத் 46 போட்டிகளில் 247 விக்கெட்டுகள் என்று இச்சாதனையை நூலிழையில் தவறவிட்டார்.
அனில் கும்ப்ளே 55 டெஸ்ட்களிலும், பிஷன் பேடி 60 டெஸ்ட்களிலும், ஹர்பஜன் 61 டெஸ்ட்களிலும், கபில்தேவ் 65 டெஸ்ட்களிலும் ஜாகீர் கான் 73 டெஸ்ட்களிலும் 250 டெஸ்ட் விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது.
இன்று அஸ்வின், 127 ரன்கள் எடுத்த வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை அடைந்தார். லெக் திசை சென்ற பந்தை முஷ்பிகுர் எட்ஜ் செய்ய சஹா கேட்ச் பிடித்தார்.
இன்று காலை மெஹதி ஹசன் மிராஸ் 51 ரன்களில் புவனேஷ்வர் குமாரிடம் பவுல்டு ஆனார். தைஜுல், தஸ்கின் அகமதுவை முறையே யாதவ், ஜடேஜா வீழ்த்தினர். கடைசி விக்கெட்டாக முஷ்பிகுர் ரஹிம் ஆட்டமிழந்தார், கேப்டனுக்கான பொறுப்புடன் வழிகாட்டியாக ஆடிய மிகச்சிறந்த இன்னிங்ஸ்.
இந்தியா தன் 2-வது இன்னிங்சை ஆடி வருகிறது. தஸ்கின் அகமதுவிடம் முரளி விஜய் (7), ராகுல் (10) ஆகியோர் வைடு பந்தை எட்ஜ் செய்து ஆட்டமிழக்க இந்திய அணி 55/2 என்று 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 15 ரன்களுடனும், கோலி 22 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
நன்றி : தி இந்து தமிழ்