பார்வையற்றோர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி மீண்டும் ‘சாம்பியன்’ பாகிஸ்தானை வீழ்த்தியது
பார்வையற்றோருக்கான 2-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிசுற்றை எட்டின. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது.
இதில் ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. நல்ல தொடக்கம் கண்ட பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 118 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. ஆனால் மிடில் வரிசை தடுமாற்றத்தால் அந்த அணியின் ரன்வேகம் தளர்ந்து போனது. 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பாதர் முனிர் 57 ரன்களும், முகமது ஜமில் 24 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் கேதன் பட்டேல், ஜாபர் இக்பால் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்தியா சாம்பியன்
அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது. அத்துடன் லீக்கில் பாகிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது.
வெற்றிக்கு வித்திட்ட இந்திய தொடக்க ஆட்டக்காரர் பிரகாஷ் ஜெயராமையா 99 ரன்களுடன் (60 பந்து, 15 பவுண்டரி) கடைசி வரை களத்தில் இருந்தார். அஜய்குமார் ரெட்டி 43 ரன்களில், ரன்-அவுட் ஆனார்.
பிரகாஷ் ஜெயராமையா ஆட்டநாயகன் விருதையும், தொடரில் மொத்தம் 570 ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் பாதர் முனிர் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.
பிரதமர் வாழ்த்து
2012-ம் ஆண்டு நடந்த முதலாவது 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. தொடர்ந்து 2-வது முறையாக பாகிஸ்தான் இந்தியாவிடம் உதை வாங்கி இருக்கிறது.
வெற்றிக்கொடி நாட்டிய இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர்களின் சாதனை இந்தியாவை பெருமைப்பட வைப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.
பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்டில், 3 வகையான பார்வை குறைபாடு உள்ள வீரர்கள் இடம் பெற்று இருப்பார்கள். ஆடும் லெவன் அணியில் குறைந்தது 4 பேர் முற்றிலும் பார்வை இல்லாதவர்கள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினத்தந்தி