திரையுலகில் நான் சந்தித்த பாலியல் தொல்லைகள்: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்
தமிழ்த் திரையுலகில் நடிகைகளுக்கு, பெண்களுக்கு நேரும் சிரமங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.
இதுகுறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இத்தனை வருடங்களாகக் கிட்டத்தட்ட தினமும் பாலியல் பாகுபாட்டை வெளிப்படுத்தும் கேலிகள், கொடுமைகளை நான் திரைத்துறையில் அனுபவித்துள்ளேன். சம்பளத்தில் ஆண், பெண்ணுக்கு இங்குப் பாகுபாடு உண்டு. பெண் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு உகந்த மரியாதை இங்குக் கிடைக்காது. கதாநாயகனுக்கு ரூ. 40 கோடி தரப்படும்போது அதில் 10% கூட கதாநாயகிக்குத் தரப்படுவதில்லையே. இதில் எங்கே சம உரிமை நிலைநாட்டப்படும்? ஒரு கதாநாயகனால்தான் படம் ஓடுகிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர் முன்னணி மலையாள இயக்குநர். தமிழிலும் படங்கள் இயக்கியுள்ளார். அவர் பாலியல் ரீதியாக எனக்குத் தொல்லைகள் தர முயற்சி செய்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தபோது என்னைப் படப்பிடிப்புத்தளத்தில் அவமானப்படுத்தினார். பொதுவெளியில் என்னைச் சத்தம் போட்டார். நான் நடித்த சில காட்சிகளை வேண்டுமென்றே 25 டேக் வரை கொண்டுபோனார். அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று நான் வலியுறுத்தியபோது மோசமான விளைவுகள் உண்டாகின. இவர் போன்ற மனிதர்கள் திரையுலகில் உள்ளார்கள். ஆனால் நாம் அவர்களைப் பற்றி பேசுவதேயில்லை.
திரைத்துறையில் புகழின் உச்சியில் இருக்கும் ஒரு நடிகை அட்ஜஸ்ட் செய்ததால் தான் அந்த நிலையில் உள்ளார் என நாம் எண்ணிக்கொள்கிறோம். ஆனால் இந்தப் பிரச்னை குறித்து யாரும் பேசுவதில்லை.
சமீபத்தில் ஒரு இயக்குநர் அனுப்பியதாக அவருடைய உதவியாளர் என்னிடம் வந்து கதை சொன்னார். பேசிக்கொண்டிருந்தபோது அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து மெல்லப் பேசத் தொடங்கினார். நான் கூட என் தேதியை அட்ஜஸ்ட் செய்யவேண்டும் என்கிறார் போல என்று நினைத்தேன். ஆனால் அவர் வேறு ஒரு அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசுகிறார் என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தேன். உடனே அவரை வெளியேறச் சொன்னேன்.
2011-ல் நான் நடித்து வெளிவந்த யுத்தம் செய் படம் வெற்றியடைந்தபிறகும் நான் குறைந்த படங்களில் நடிப்பதில் ஆச்சர்யம் இருக்கமுடியுமா? புத்திசாலியான பெண்ணுடன் வேலை செய்ய இயக்குநர்கள் விரும்புவதில்லை. நியாயமான சம்பளம் கேட்கும் பெண்ணையும் யாரும் விரும்புவதில்லை. சம உரிமை கேட்கும் பெண்ணாக இருந்தால் உங்களைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும்.
பெண்களுக்கு நேரும் தொல்லைகள் குறித்து தமிழ்த்திரையுலகில் உள்ள ஆண்களும் பேசவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.