இந்த ஆண்டும் மோசமான வானிலையே நிலவும்
‘ஆர்டிக் பகுதியில் வெப்பக் காற்று வீசுவது; பனிமலைகள் உருகுவது; கடலில் வெப்பச் சலனம் அதிகமாக இருப்பது போன்றவை தொடர்வதால், இந்த ஆண்டும், மிக மோசமான வானிலை நிலவும் என, ஐ.நா.,வின் உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு எச்சரித்துள்ளது.
இது குறித்து அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: உலகெங்கும் தொழில் மயமாக்கப்பட்ட காலத்துக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், வெப்ப நிலை, 1.1 டிகிரி செல்சியல் அளவுக்கு உயர்ந்துள்ளது.
அதேபோல், பனிமலைகள் உருகுவதால், கடல்களின் நீர்மட்டமும், மிக வேகமாக உயர்ந்து வருகிறது. 2016 நவம்பரில் மட்டும், 40 லட்சம் சதுர கி.மீ., பரப்புள்ள பனி உருகியுள்ளது; இது மிகவும் அசாதாரண சூழ்நிலை.
பருவ நிலை மாறுபாடுகள் பாதிப்பினால், பூமி சூடாகி கொண்டிருக்கிறது. உலக அளவில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதற்கு, பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், இயற்கையாக ஏற்படும் தாக்கத்தைவிட, மனிதர்களால் ஏற்படுத்தப்படும் சேதங்களே, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
காற்றில், கரியமில வாயுவின் அளவு உயர்ந்து வருகிறது. மனித நடவடிக்கைகளால் தான், இது ஏற்படுகிறது. கடந்த, 2001ம் ஆண்டில் இருந்து, ஆண்டுக்கு சராசரியாக, 0.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் கூடி வருகிறது.
ஆர்டிக் பகுதியில் வெப்பக் காற்று வீசுவது, பனிமலைகள் உருகுவது, கடலில் வெப்பச் சலனம் அதிகமாக இருப்பது போன்றவற்றால், 2016ல், மிகவும் வெப்பமான ஆண்டாக விளங்கியது. இந்த சூழ்நிலைகள் தொடர்வதால், இந்த ஆண்டும் மிக மோசமான வானிலையை நிலவும்.
இந்த நிலையில், பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்த, பருவ நிலை மாறுபாடுகளை தடுக்கும் ஒப்பந்தம், மிக முக்கியமாக கருதப்படுகிறது. அதனடிப்படையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுத்தால் மட்டுமே, நிலைமை இன்னும் மோசமாகாமல் பாதுகாக்க முடியும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.