என் வாழ்நாளில் சிறந்த ஆட்டம்: டெல்லி ஆட்டநாயகன் சாம்சன்
10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சாம்சனின் அதிரடி சதத்தால் டெல்லி டேர்டெவில்ஸ் புனேயை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.
புனே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. சஞ்சு சாம்சன் 63 பந்தில் 102 ரன்னும் (8 பவுண்டரி, 5 சிக்சர்), கிறிஸ் மோரிஸ் 9 பந்தில் 38 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் விளையாடிய ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட் 16.1 ஓவர்களில் 108 ரன்னில் சுருண்டது. இதனால் டெல்லி அணி 97 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
புனே அணி தரப்பில் மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 20 ரன் எடுத்தார். ஜாகீர்கான், அமித் மிஸ்ரா தலா 3 விக்கெட்டும், கும்மின்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
வெற்றி குறித்து டெல்லி அணி கேப்டன் ஜாகீர்கான் கூறியதாவது:- சாம்சனின் பேட்டிங் அபாரமாக இருந்தது. கிறிஸ் மோரிஸ் ஆட்டத்தை சிறப்பாக நினைவு செய்தார். எங்கள் அணியில் திறமை வாய்ந்த கேப்டன்கள் உள்ளனர். முதல் ஆட்டத்தில் தோற்ற பிறகு பெற்ற இந்த வெற்றி முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்றைய ஆட்டத்தில் புனே அணி கேப்டன் சுமித் ஆடாததால் ரகானே கேப்டனாக பணியாற்றினார். தோல்வி குறித்து ரகானே கூறியதாவது:- டெல்லி அணியின் பேட்டிங் நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது. மிடில் ஓவரில் சஞ்சு சாம்சனும், கடைசியில் கிறிஸ்மோரிசும் அதிரடியாக விளையாடினார்கள். எங்களது பந்துவீச்சு நேர்த்தியாகவே இருந்தது. ஆனால் கடைசி 3 ஓவரில் தான் ரன்களை வாரி கொடுத்துவிட்டோம். 200 ரன்னுக்கு மேல் இலக்கு என்பது கடினமானதே.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற டெல்லி அணி வீரர் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-
எனது ஆட்டம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் எனது ஆட்டத்தால் அணி வெற்றி பெற்றது மிகமிக மகிழ்ச்சியை அளிக்கிறது. ராகுல் டிராவிட்டின் ஆலோசனை மிகுந்த பலனை அளித்தது. இந்த ஆட்டம் என் வாழ்நாளில் சிறந்த ஆட்டமாகும். தொடர்ந்து இதே மாதிரி சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்கு வகிக்க விரும்புகிறோம்.
இந்திய அணியில் விளையாடுவதே எனது கனவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
22 வயதான சாம்சன் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் மட்டும் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.