தனுஷ் யாருடைய மகன்…? தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு!
தனுஷ் யாருடைய மகன் என்பது குறித்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது மதுரை உயர் நீதிமன்றக் கிளை. மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் தங்கள் மகன் என உரிமைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் நேரில் ஆஜராக தனுஷுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து அவரின் அங்க அடையாளங்களும் சரிபார்க்கப்பட்டன.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கதிரேசன் – மீனாட்சி தம்பதி சார்பில் வழக்கறிஞர் டைடஸ் ஆஜராகி வாதங்களை முன் வைத்தார். மன நலம் பாதிப்பு? அதில், கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தம்பதியின் மகன் தனுஷ் என்பது குறித்து தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் குளறுபடி உள்ளதாக கூறினார். தனுஷின் உடலில் உள்ள அங்க அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 2002-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனுஷ் வீட்டை விட்டு வெளியேறிய போது மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்ததாகவும் தெரிவித்தார். ஒத்தி வைப்பு அப்போது குறுக்கிட்ட தனுஷ் தரப்பு வழக்கறிஞர், தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்திற்காக 2002 ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி தணிக்கைச் சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளதாகவும், ஜூலை மாதம் வீட்டை விட்டு தனுஷ் வெளியேறினார் எனக் கூறுவது பொய்யானது என்பது நிரூபணமாகியுள்ளதாகவும் வாதிட்டார். மேலும், ஜூன் மாதம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனுஷ் பதிவு செய்ததாக கூறியதும் முரண்பாடாக உள்ளதாக தெரிவித்தார். எனவே, முகாந்திரம் இல்லாத வழக்கில் தனுஷின் டி.என்.ஏ. பரிசோதனை தேவையற்றது என கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.