TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்!
போட்டித் தேர்வு டிப்ஸ்
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அரசுப் பணியில் சேர அரிய வாய்ப்பை வழங்குகிறது டி.என்.பி.எஸ்.சி. என்று சொல்லப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். ஒவ்வொரு ஆண்டும் போட்டித் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டு அதன்படி தேர்வுகளை நடத்திவருகிறது.
இந்தத் தேர்வுகளுக்குத் தேவையான பாடத்திட்டங்கள், கேள்வி கேட்கும் முறைகளைப் பற்றிய விளக்கங்களை இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் புவியியல் பாடப்பிரிவிலிருந்து வள ஆதாரங்கள், தொழில்களில் முதல்நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை, ஐந்தாம் நிலை எனப் பலவற்றையும், எந்தெந்தத் தொழில்கள் இதில் அடங்கும் என்பதையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில தகவல்களை இனி பார்ப்போம்…
வளர்ந்துவரும் நாடுகளில் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தொழில்களிலும், வளர்ச்சியடைந்த நாடுகளில் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் நிலைத் தொழில்களிலும் மக்கள் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.உணவு சேகரிக்கும் முதல்நிலைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பழங்குடி இன மக்கள்
ஆப்பிரிக்க காடுகள் – புஷ்மென் இனத்தவர்கள்
அந்தமான், நிகோபர் தீவுகள் – பழம்பெரும் மக்களான ஜாரவா, ஓஞ்சஸ்
ஆப்பிரிக்கா – பிக் மக்கள்
அமேசான் வடிநிலப்பகுதி – அமெரிண்டியன்
கனடா – எஸ்கிமோக்கள் நினைவில் கொள்க
* உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி – ‘டோன்லேசாப்’
* கண்டதிட்டு பகுதியிலும், ஆழமற்ற பகுதி யிலும் ‘ப்ளாங்டன்’எனப்படும் மீன் உணவு பெருமளவில் கிடைக்கிறது
* மீன்கள் கிடைக்கும் இடங்களை அறியும் நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி ஜப்பானியர் மீன் பிடிக்கின்றனர்
* பெருமளவில் நடைபெறும் முதன்மைத் தொழில் – உணவு சேகரித்தல் சுரங்கத் தொழில்
* இது முதன்மைத் தொழில். ‘கொள்ளைத் தொழில்’ என்றும் அழைக்கப்படுகிறது.
* ‘டெரிக்’என்பது எண்ணெய் வயல்களில் கோபுரம் போன்ற தோற்றமுடைய கட்டமைப்பாகும்.
வேளாண்மை
* வேளாண்மை ஒரு முதல் நிலை தொழிலாகும்.
* வெப்பநிலை மற்றும் மழையின் அளவு ஆகியவை வேளாண்மைத் தொழிலை நிர்ணயிக்கும் காரணிகள்.
* 600 க்கு குறைவான வெப்பநிலையில் மண் குளிர்ந்து உறைந்து போவதால் செடிகள் வளராது.
* காற்றில் உள்ள ஈரப்பதம், அப்பகுதியில் விளையும் பயிர்வகை மற்றும் பயிர் வளர ஏற்ற காலம் போன்றவற்றை நிர்ணயிக்கின்றது.
நீர்ப்பாசனத்தின் வகைகள்
1. கால்வாய்ப் பாசனம்: வேளாண்மையில் கால்வாய் பாசனம் மிகவும் முக்கியத்துவம் பெற்றுவருகின்றது. அரசு அதிக செலவில் வாய்க்கால் பாசனத்தை நிர்மாணித்து பயிர்தொழிலுக்கு ஆக்கம் தருகின்றது. கால்வாய்கள் மிக அதிகமாக உத்திரப்பிரதேசத்திலும், பஞ்சாபிலும் உள்ளன. இவற்றையடுத்து வங்காளம், பீகார், தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கால்வாய்கள் காணப்படுகின்றது.
2. தெளிப்பு நீர்ப்பாசனம்: நிலப்பரப்பிற்கு மேலே நீரை மழைபெய்வது போல் பம்ப் உதவியுடன் தெளிக்கச் செய்வது. காற்றின் வேகம் 15 கிலோ மீட்டர் / மணி குறைவாக இருக்கும்போது செயல்படுத்துவது எளிதாகிறது. இதனால் நீர் இழப்பைத் தடுக்கலாம். அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் தெளிப்பானைப் பயன்படுத்துவதால் நீர் ஆவியாகுதல் இழப்பைத் தடுக்கலாம்.
3. மையச் சுழற்சிப் பாசனம்: சுழல் அச்சினைக் கொண்டு வட்டப் பாதையில் நீர் தெளிக்கும் முறையே மையச் சுழற்சிப் பாசன முறையாகும்.
4. சொட்டு நீர்ப்பாசனம்: நீர் சொட்டுச் சொட்டாகச் செடிகளின் வேருக்கு நேரடியாகவோ அல்லது அருகாமையிலோ செலுத்தப்படுவது சொட்டு நீர்ப்பாசனம்.
நிலத்தோற்றங்கள்
மலைகள், பீடபூமிகள், சமவெளிகள் ஆகியன. வண்டல் மண் சமவெளி வேளாண்மை தொழில் செய்ய ஏற்றது. மலைச்சரிவுகளில் காபி, தேயிலை பயிரிடலாம்.
மண்வளம்
மண் என்பது உலகின் இயற்கை ஆதாரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வளமாகும். ஒரு செடி செழுமையுடன் வளர்ந்து அதிக மகசூல் தர வேண்டுமானால் அதற்கு ஏழு அடிப்படைத் தேவைகள் உள்ளன. அவை 1.சூரிய ஒளி 2.கரியமில வாயு 3.ஆக்ஸிஜன் 4.தண்ணீர் 5.தாது உப்புகள் 6.மண் பிடிமானம் மற்றும் 7.மண்வெப்பம் இதில் முதல் மூன்றும் சூரிய மூலமும், காற்று மூலமும் பயிருக்குக் கிடைத்துவிடுகிறது.
மற்றைய ஐந்து தேவைகளும் மண்ணிலிருந்துதான் பெற்றாக வேண்டும். அதிகப்படியான மழை, காற்று மற்றும் வெப்பம் ஆகிய தாக்குதல்களால் மண்ணிலுள்ள தாதுக்கள் நீக்கப்பட்டு மண் குறைவு ஏற்படுகிறது. எனவே மண்வள மேலாண்மை அதிக மகசூல் பெறவும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.வேளாண்மைத் தொழிலின் வகைகள் மற்றும் பணப்பயிர், உணவுப் பயிர்களைப் பற்றிய தகவல்களை அடுத்த இதழில் பார்ப்போம்.