ஆஸ்திரேலிய பூங்காவில் இந்திய கர்ப்பிணிக்கு இடம் மறுப்பு
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர கேளிக்கை பூங்காவில் நாற்காலியில் இந்திய கர்ப்பிணி அமர விடாமல் தடுக்கப்பட்டார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உர்ஜித் படேல் என்ற இந்தியர் பணியாற்றி வருகிறார். இவர், சில நாள்களுக்கு முன்பு தனது கர்ப்பிணி மனைவி, 4 வயது மகளுடன் லூனா கேளிக்கை பூங்காவுக்கு சென்றுள்ளார். அங்கிருந்த நாற்காலியில் ஆஸ்திரேலிய பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் உர்ஜித்தின் மனைவி அமரச் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆஸ்திரேலிய பெண், “இந்தியர்களை நான் வெறுக்கிறேன். என் அருகே அமரக் கூடாது. இங்கிருந்து ஓடிவிடு” என பேசினார்.அந்த பெண் பேசியதை வீடியோவில் பதிவு செய்த உர்ஜித், அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.