சோழவரம், பூண்டி ஏரிகளை தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியும் வறண்டுவிடும் அபாயம்
சென்னை மாநகருக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் பயன்பட்டு வருகின்றன. கடுமையான வறட்சி காரணமாக தற்போது சோழவரம், பூண்டி ஏரிகள் வறண்டுவிட்டன.
இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு அந்த ஏரிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏரிகளைத் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியும் வறண்டுவிடும் அபாய நிலையில் உள்ளது.
ஆழ்குழாய் கிணறுகள்
பொதுமக்களுக்கும் போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் சென்னையில் பல்வேறு இடங்களில் ஆழ்குழாய் கிணறு தோண்டும் பணிகளும் தீவிரமாக நடந்துவருகிறது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர்கள் அதிகம் பேர் ஈடுபட்டு உள்ளனர்.
இதுதவிர கேன் தண்ணீர் விற்பனையும் அதிகரித்து உள்ளது. தெருக்குழாய்களில் வரும் தண்ணீரை பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்துக்கிடந்து பிடித்துச் செல்கின்றனர்.
சென்னை மாநகர குடிநீர் வினியோகம் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:–
செம்பரம்பாக்கம் ஏரி
பூண்டி ஏரியில் இருந்து முறையாக திறந்துவிடும் அளவுக்கு தண்ணீர் இல்லாமல் வறண்டுவிட்டது. ஏரியின் ஒரு பகுதியில் மட்டும் 42 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அதில் இருந்து தினசரி 12 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்கு எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் 201 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ள புழல் ஏரியில் இருந்து 80 கனஅடியும், 119 மில்லியன் கனஅடி உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 58 கனஅடியும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீரின் ஒரு பகுதி விரைவாக ஆவியாகி வருகிறது. இந்தநிலை தொடர்ந்தால் ஓரிரு நாட்களில் செம்பரம்பாக்கம் ஏரியும் வறண்டுவிடும்.
வறண்டுவிடும்
தற்போது 4 ஏரிகளிலும் சேர்த்து 362 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5,246 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது.
பல ஆண்டுகளில் வறட்சியை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு வறட்சி காலத்திலும் ஏதாவது ஓரிரு ஏரிகள் வறண்டுவிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்யும் அனைத்து ஏரிகளும் வறண்டுவிடும் நிலை ஏற்பட்டு உள்ளது.
70 சதவீதம் நிறைவு
சென்னை மாநகர குடிநீருக்கு கல்குவாரி தண்ணீரை முழுமையாக பயன்படுத்துவதற்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் இருந்து குடிநீர் வினியோகம் தொடங்கும்.
இதுதவிர விவசாய கிணறுகள் மற்றும் நெய்வேலி சுரங்கங்களில் இருந்தும் தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. போரூர் ஏரியில் இருந்தும் 100 நாட்களுக்கு தண்ணீர் எடுப்பதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.