அழகான பெண்கள் அதிகம் இருந்தால், பலாத்கார வழக்குகளும் அதிகரிக்கும் ஒரு ஜனாதிபதியின் பேச்சு
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான ரோட்ரிகோ அடிக்கடி மிக மோசமான பேச்சுக்களால் சர்ச்சையில் சிக்கி வருபவர். மட்டுமின்றி போதை மருந்து கும்பலை அடியோடு ஒழிக்கிறேன் என ஆயிரக் கணக்கான குடிமக்களின் மரணத்திற்கும் காரணமானார்.
கடந்த வியாழனன்று பாலியல் பலாத்காரம் அதிகரித்துள்ளது குறுத்து அவர் அளித்துள்ள பதில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டுடெர்டேவின் சொந்த ஊரான டேவோவில் நாட்டிலேயே அதிக பலாத்காரக் குற்றங்கள் நடைபெறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, அழகான பெண்கள், அதிகமுள்ள இடங்களில் பலாத்காரங்களும் அதிகம் இருக்கத்தான் செய்யும் என அவர் நகைச்சுவையாகக் கூறினார். ஆனால் இந்தக் கருத்து சர்வதேச அளவில் மகளிர் அமைப்புக்களின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.
கடந்த 1989 ஆம் ஆண்டு டேவோ நகரத்து மேயராக ரோட்ரிகோ பதவி வகித்த காகலட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய மத போதகர் ஜாக்குலின் ஹாமில் சக கைதிகளால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அப்போது அவர் தெரிவித்த கருத்து மிகவும் அருவருப்பானது என ஊடகங்கள் பதிவு செய்தன. குறித்த நபர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது தமக்கு கோபம் வரவழைத்தது என கூறிய ரோட்ரிகோ, நகர மேயரான தமக்கு அந்த வாய்ப்பு அமையாதது வருத்தமான செயல் என கருத்து தெரிவித்திருந்தார்.இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த ஆஸ்திரேலிய தூதரை, இது அரசியல், எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என எனக்கு தெரியும் என பதிலளித்தார் ரோட்ரிகோ.
2017 ஆம் ஆண்டு சிறார்கள் மீது வன்புணர்வு குற்றங்கள் அதிகரிப்பதை சுட்டிக்காட்டிய அவர், உலக அழகிகளை விட்டுவிட்டு ஏன் சிறார்களை துன்புறுத்துகின்றார்கள் என அவர் பதில் அளித்திருந்தார். சமீபத்தில் சொந்த மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவித்ததை, நாடகமாடுகிறார் என கூறி அச்சம்பவத்தை மூடிமறைத்தார் ஜனாதிபதி ரோட்ரிகோ.