நடிகை பிரியா வாரியர் நடித்தது மத உணர்வை புண்படுத்துவதாக இல்லை: வழக்குகளை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கேரளாவில் ஒமர் லூலு இயக்கத்தில் மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட படம் ‘ஒரு அடார் லவ்.’ இந்த படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் ஆதரவை பெற்றது. சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த பாடலில் தனது காதலரை பார்த்து கண்களை நளினமாக சிமிட்டியும், புருவங்களை அசைத்தும் நடித்திருந்த இளம் நடிகை பிரியா வாரியர் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன்மூலம் ஒரே பாடலில் உலகம் முழுவதும் பிரபலமானார்.
அதேநேரம் இந்த பாடல் தங்கள் மத உணர்வை புண்படுத்துவதாக ஒரு பிரிவினர் புகார் கூறினர். இது தொடர்பாக படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகை பிரியா வாரியர் ஆகியோர் மீது ஐதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களில் போலீசில் புகாரும் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி பிரியா வாரியர் சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தார். கேரளாவில் கடந்த 40 ஆண்டுகளாக எழுதி, பாடப்பட்டு வரும் இந்த பாடல் எந்த அடிப்படையிலும் மத உணர்வை புண்படுத்தவில்லை எனக்கூறிய அவர், இந்த பாடலுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்குகள் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானவை என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐதராபாத் மற்றும் மும்பை போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட புகார்கள் அடிப்படையில் பிரியா வாரியர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கடந்த பிப்ரவரி 7-ந்தேதி தடை விதித்தது.
பின்னர் தொடர்ந்து நடந்த இந்த வழக்குகளின் விசாரணைகள் அனைத்தும் நேற்று முடிவடைந்தது. இதில் பிரியா வாரியருக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த 1978-ம் ஆண்டு முதல் பாடப்பட்டு வரும் இந்த பாடல், எந்த மத உணர்வுகளையும் புண்படுத்தவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
பிரியா வாரியர் உள்ளிட்டோரின் ரிட் மனுக்களை ஏற்றுக்கொள்வதாகவும், அவருக்கு எதிராக ஐதராபாத் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாகவும் அறிவித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் எந்த வழக்கோ, புகாரோ இவர்களுக்கு எதிராக பதியக்கூடாது எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதைப்போல இந்த பாடலில் நடித்ததிலும் மத உணர்வுகளை புண்படுத்துவதை எதிர்க்கும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 295 ஏ-ன் கீழ் எந்தவித விதிமீறலும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும், “யாரோ பாடல் எழுதுகிறார். அதில் யாரோ நடிக்கிறார். இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது. உங்களுக்கு வேறு வேலை இல்லாமல் ஏன் இப்படி எல்லாவற்றுக்கும் போலீசில் புகார் அளிக்கிறீர்கள்?” என்று வழக்கு போட்டவர்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கடுமையாக விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.