வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறையா? நிதி அமைச்சகம் விளக்கம்
செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்றும், இதனால் ஏ.டி.எம். உள்பட வங்கி சேவைகள் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.
அதாவது 2-ந்தேதி (நாளை) முதல் 5-ந்தேதி வரையிலும், அதன் பின்னர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் வங்கிகள் இயங்காது என அந்த தகவல்கள் பரவின.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:-
செப்டம்பர் 2 (ஞாயிற்றுக்கிழமை) வங்கிகளுக்கான வழக்கமான விடுமுறை நாள். செப்டம்பர் 3 (திங்கட்கிழமை) ஜன்மாஷ்டமி விடுமுறை ஆகும். ஆனால் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தாது. குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே விடுமுறை தரப்படுகிறது.
அதன் பின்னர் செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் (செவ்வாய் மற்றும் புதன்) மத்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இருந்த போதிலும் இந்த போராட்டம் எந்த வகையிலும் வங்கி சேவைகளை பாதிக்காது.
அதே போல் செப்டம்பர் 8, 2-வது சனிக்கிழமை என்பதாலும், செப்டம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அன்றைய தினங்கள் வழக்கமான விடுமுறையாகிறது. எனினும் அந்த நாட்களில் அனைத்து மாநிலங்களிலும் ஏ.டி.எம்.கள் முழுமையாக இயங்கும். இணைய பரிமாற்றங்களிலும் பாதிப்பு இருக்காது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.