கடைசி பந்தில் டை ஆனது: இந்தியா-மேற்கிந்திய தீவு ஒரு நாள் கிரிக்கெட்
இந்தியாவில் சுற்றுலா மேற்கொண்டுவரும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஆடிய இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் கடைசி பந்தில் நான்கு ரன் அடித்து மேட்சை வெற்றி தோல்வி இல்லாத ‘டை’ மேட்சாக மாற்றியது.
விசாகபட்டனத்தில் நடந்த இந்த போட்டியில், முன்னதாக இந்தியா பேட் செய்தது. அணித் தலைவர் கோலி அடித்த 157 ரன்கள் எடுத்ததோடு, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் கடந்தார் . அதன் மூலம் சச்சின் டென்டுல்கரை விட குறைவான ஆட்டங்களில் 10 ஆயிரம் ரன் கடந்து புதிய சாதனையும் படைத்தார். இறுதியில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாவது பேட் செய்ய வந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியும் கடைசியில் ஏழு விக்கெட் இழப்புக்கு சரியாக 321 ரன் அடித்தது.
பரபரப்பாக நடந்த சேசிங்கில் கடைசி பந்தில் 4 ரன் எடுத்தால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடியும் நிலை இருந்தது.
ஆறு ரன் எடுத்தால் மட்டுமே மேற்கிந்தியத்தீவுகள் அணி வெற்றி பெறும் என்ற பரபரப்பான நிலை.
கடைசி பந்தை இந்தியாவின் உமேஷ் யாதவ் வீசினார். பந்தை எதிர்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஷாய் ஹோப் அந்தப் பந்தை பவுண்டரிக்கு அற்புதமாக விரட்டி தமது அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.
ஹோப் 134 பந்துகளை எதிர்கொண்டு 123 ரன்கள் குவித்திருந்தார்.
அவர் ஆறு அடிக்கவில்லை என்று அவரது அணி நொந்துகொள்ளுமா, நான்கு அடித்து தோல்வியில் இருந்து காப்பாற்றினார் என்று உச்சிமோந்து கொண்டாடுமா?