எடப்பாடி பழனிசாமி வெளிநாடு புறப்பட்டார்
தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளிநாடு புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் அவரை அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
வெளிநாடு பயணம்
தொழில் துறையில் முன்னேறிய மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டது.
இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 14 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். அதன்படி நேற்று முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந் தேதி வரை 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். முதலில் லண்டன் சென்று தொழில் அதிபர்களை அவர் சந்திக்கிறார்.
அ.தி.மு.க. தொண்டர்கள்
இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து துபாய் வழியாக லண்டன் செல்ல சென்னை விமான நிலையம் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கத்திப்பாராவில் இருந்து மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வரை அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்து வழியனுப்பினர். நீண்டவரிசையில் காத்திருந்த தொண்டர்களிடம் பூங்கொத்து, சால்வைகளை எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார்.
விமான நிலையத்தில் முதல்-அமைச்சரை, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர். எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு அதிகாரிகள் சாய்குமார், விஜயகுமார், செந்தில்குமார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் லண்டன் சென்றனர்.
போக்குவரத்து நெரிசல்
லண்டனை தொடர்ந்து அமெரிக்காவுக்கும், பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் சென்று தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடும் முதல்-அமைச்சர். 10-ந் தேதி சென்னை வந்தடைகிறார்.
முதல்-அமைச்சர் வெளிநாட்டிற்கு செல்வதால் அவரை வழியனுப்ப அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அதிக அளவில் குவிந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரங்கிமலையில் இருந்து பல்லாவரம் வரை சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.