ஒரு வாரத்துக்கு பிறகு சென்னையை குளிர்வித்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் வட மாவட்டங்களில் வெப்பசலனத்தால் நல்ல மழை பெய்தது. அப்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை பரவலாக பெய்தது.
அதனைத்தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்தது. அவ்வப்போது கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்வதற்கான ரம்மியமான சூழல் நிலவினாலும், மழை பெய்யாமல் ஏமாற்றி வந்தது.
குளிர்ந்தது
இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை 6.15 மணிக்கு மேல் பரவலாக மழைபெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடத்துக்கு மேல் இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது.
சென்னை எழும்பூர், கோடம்பாக்கம், தியாகராயநகர், சைதாப்பேட்டை, பாரிமுனை, வடபழனி, மீனம்பாக்கம், பெரம்பூர், குரோம்பேட்டை, பூந்தமல்லி உள்பட பல இடங்களிலும் புறநகர் பகுதிகளான மாதவரம், வடபெரும்பாக்கம், வேளச்சேரி, செங்குன்றம், வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேற்று மழை பெய்தது.
கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலை பெய்த மழையினால் சென்னை குளிர்ந்தது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் காற்று பலமாக வீசியது. சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அடையாறு பகுதியில் காற்று பலமாக வீசியதால் அந்த பகுதியில் இருந்த பழமையான மரம் ஒன்று விழுந்தது. அதை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
சாலை ஓரங்களிலும், தாழ்வான பகுதிகளில் நேற்று மாலை பெய்த சிறிது நேர மழையில் தண்ணீர் தேங்கியது. அதை சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மழை சற்று ஓய்ந்ததும், சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சில இடங்களில் ஆமை வேகத்தில் வாகனங்கள் கடந்து சென்றன.