கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடியை திருப்பித் தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. மீது ஏர்செல்-மேக்சிஸ், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களில் வெளிநாடு செல்வதற்காக தலா ரூ.10 கோடி என மொத்தம் ரூ.20 கோடியை சுப்ரீம் கோர்ட்டில் வைப்புத் தொகையாக செலுத்தி இருந்தார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த தொகையை அவர் வைப்புத் தொகையாக செலுத்தினார்.
வெளிநாடு சென்று திரும்பி வந்த பிறகு அந்த வைப்புத் தொகையை தனக்கு திருப்பித் தரவில்லை என்றும், தான் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை திருப்பித் தருமாறு சுப்ரீம் கோர்ட்டு பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், வைப்புத்தொகையாக கார்த்தி சிதம்பரம் செலுத்திய ரூ.20 கோடியை அவருக்கு திருப்பித் தருமாறு உத்தரவு பிறப்பித்தனர்.