தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன
சென்னை,
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதில்,
* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டு உள்ளதால், இதற்கான தடை தொடரும்.
* தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றிஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
* நோய் பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்கள்மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது.
* இன்று முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட சில செயல்பாடுகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நடைமுறைகள் நாளை முதல் அமலுக்கு வரும். நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
* தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொது மக்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவதையும், முக கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து, அனுமதிக்க வேண்டும். முக கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்கக்கூடாது. ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும்.
* தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்ப தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும். நிலையான வழிகாட்டு நடைமுறைகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பஸ் மற்றும் சென்னையில் இயக்கப்படும் மாநகர பஸ்களில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
* தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகா செல்லும் பஸ்களில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
* முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள் அனைத்து ஷோ ரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும், இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும், வாடிக்கையாளர்கள் இரவு 11 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். மேலும், உணவகங்களில் இரவு 11 மணி வரை பார்சல் சேவை அனுமதிக்கப்படும்.
* கேளிக்கை விடுதிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
* பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் கூடும் இடங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
* நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள திரையரங்குகள் உள்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும்.
* நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சமாக 200 பேர் மட்டும் பங்கேற்கும் வண்ணம், சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் அனுமதிக்கப்படும்.
* நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.
* விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில், பார்வையாளர்கள் அனுமதியின்றி விளையாட்டு போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படும்.
* நீச்சல் குளங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
* நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
* 31.8.2020 அன்று அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாடு இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும். இருப்பினும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.
* நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். இருப்பினும், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சின்னத்திரை-திரைபடக் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொண்டு அல்லது தடுப்பூசி போட்டு கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்வதை நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.
* வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் டிரைவர் தவிர்த்து 3 பயணிகள் மட்டும் பயணிக்க ஏற்கனவே 1.7.2020 முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.
* ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பயணிகள் மட்டும் பயணிக்க ஏற்கனவே 1.7.2020 முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.
* வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும், கள அளவிலான குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும். அதுபோன்று அனைத்து மாவட்டங்களிலும், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும்.
நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள், இந்த பகுதிகளில் இருந்து வெளியில் வராத வகையில், காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களை கொண்டு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
இந்த பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதோடு, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு உதவி புரிய தன்னார்வலர்களும் நியமிக்கப்படுவர்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், பொது மக்கள் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.
பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்தும், முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த்தொற்று பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.
இன்று (சனிக்கிழமை) முதல் பஸ்களில் பயணிகள் நின்றபடி பயணிக்க கூடாது என்ற கட்டுப் பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், அரசு சார்பில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 300 முதல் 400 பஸ்கள் வரை கூடுதலாக இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.