Breaking News
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடக்கம்

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை சுனாமியை போன்று வேகமாக தாக்கி வருகிறது. கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகம் இருந்தால், அவர்களுக்கு வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படுகிறது. சிரமமில்லாமல் சுவாசிக்க அவர்களுக்கு ஆக்சிஜன் செயற்கையாக அளிக்க வேண்டியுள்ளது.

ஆனால், நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடாக உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் இறக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் அடைக்கப்பட்டு கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம், எங்களுக்கு அனுமதி வழங்கினால் ஆக்சிஜன் தயாரித்து வழங்க தயாராக இருக்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்துவிட்டது. அதே நேரத்தில், மத்திய அரசு தரப்பில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று யோசனை வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் இதே கருத்தை வலியுறுத்தினார்.

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் விளக்கமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து, இந்த வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து கட்சி தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும் ஆலையை திறந்து அங்கு தமிழக அரசே ஆக்சிஜன் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாமா? என்பது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ. பன்னீர் செல்வம், விஜயபாஸ்கர், ஆர்பி உதயகுமார் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் கனிமொழி, ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட 8 கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018 ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.