அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் இந்தியருக்கு முக்கிய பதவி டிரம்ப் நியமனம் செய்தார்
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் 20-ந் தேதி பதவி ஏற்க உள்ளார். இதற்கு இடையே அவர் தனது புதிய நிர்வாகத்தில் பணியாற்றுவதற்கு பல்வேறு முக்கிய நியமனங்களை செய்து வருகிறார்.
அந்த வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜ் ஷா என்பவரை வெள்ளை மாளிகையில், தகவல் தொடர்பு துணை இயக்குனர் பதவியில் டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இவர், தகவல் தொடர்பு, அரசியல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.தற்போது இவர், குடியரசு கட்சி தேசிய குழுவில் எதிர்க்கட்சி ஆராய்ச்சி பிரிவின் தலைமை பதவியில் உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் எதிர்ப்பு பிரசாரத்தில் முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு எதிரான ஆராய்ச்சியை ராஜ் ஷா தலைமையிலான குழுதான் மேற்கொண்டது.
இவரது நியமனம் பற்றி வாஷிங்டன் வெள்ளை மாளிகை ஊழியர்களின் தலைமை பொறுப்பில் அமர உள்ள ரெயின்ஸ் பிரீபஸ் கூறும்போது, “ராஜ் ஷா உள்ளிட்டவர்களின் நியமனங்களை டிரம்ப் புதன்கிழமை (நேற்று முன்தினம்) செய்தார். இவர்கள் ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள டிரம்பின் திட்டங்களை செயல்படுத்துவார்கள். வாஷிங்டனில் உண்மையான மாற்றங்களை கொண்டு வருவார்கள்” என்று குறிப்பிட்டார்.ராஜ் ஷாவின் பூர்விகம், குஜராத். அவரது குடும்பம், அங்கிருந்து மும்பைக்கு குடி பெயர்ந்து அங்கிருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்ததாகும்.
ராஜ் ஷா கனெக்டிகட் மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர். டிரம்பின் கீழ் அவர் நேரடியாக பணியாற்றப்போவது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினத்தந்தி