‘எச்-1 பி’ விசா விவகாரம்: டெல்லியில் 6-ந் தேதி இந்தியா அமெரிக்கா பேச்சுவார்த்தை
அமெரிக்க நாட்டில் இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு, அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு எப்போதுமே பெரும் வரவேற்பு இருக்கிறது.
2007-ம் ஆண்டு தொடங்கி 2017-ம் ஆண்டு வரையில், இந்தியாவில் இருந்து 22 லட்சம் பேர் இந்த விசாவுக்கு விண்ணப்பித்தனர் என்றால், அந்த விசாவுக்கு இந்தியர்கள் மத்தியில் உள்ள ஆர்வத்தை அறிந்து கொள்ள முடியும்.
ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்களை அமெரிக்கா வழங்குவது வழக்கம். இந்த விசாக்களை பெறுவதில் ஒவ்வொரு ஆண்டும் பெரும் போட்டி நிலவுகிறது. லாட்டரி குலுக்கல் நடத்தித்தான் விசாதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இது தவிர அமெரிக்காவில் முதுநிலைப்பட்டம் பெற்றவர்கள், உயர் கல்வி பெற்றவர்களுக்கு என தனியாக 20 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படுகின்றன. 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்கு வசதியாக இந்த விசா தரப்படுகிறது. மேலும் 2 ஆண்டுகள் இந்த விசா நீட்டிக்கத்தகுந்தது ஆகும்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி டிரம்ப் ஜனாதிபதி பதவியை ஏற்ற பின்னர், ‘அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்ற கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தி இருக்கிறார். இதன்காரணமாக அமெரிக்காவில் மற்ற நாட்டினர் பணியாற்றுவதை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது.
இதன் காரணமாக ‘எச்-1 பி’ விசா கேட்டு விண்ணப்பிக்கிற இந்தியர்களின் விண்ணப்பங்கள் முன்எப்போதும் இல்லாத வகையில் நிராகரிக்கப்படுகின்றன என கடந்த ஜூலை மாதம் வெளியான ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது.
இந்த நிலையில் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பினை மறுக்கிற விதத்தில், ‘எச்-1 பி’ விசாக்களை இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதாக அமெரிக்கா கருதுகிறது.
எனவே இந்த விசாக்களை முறைகேடாக பயன்படுத்தாத அளவுக்கு அதன் விதிமுறைகளை கடுமையாக்கும் விதத்தில் விசா சீர்திருத்தங்கள் என்ற பெயரில் டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது.
சமீபத்தில் கூட இந்த விசாக்களுக்கான சிறப்பு பரிசீலனை நடைமுறையை (பிரிமியம் பிரசாசிங்) மேலும் 5 மாதங்களுக்கு நிறுத்தி வைத்தது.
இப்படிப்பட்ட நடவடிக்கைகளால், இந்தியர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுபற்றி கடந்த மாதம் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசுகையில் குறிப்பிட்டார்.
அப்போது அவர், “‘எச்-1 பி’ விசா விவகாரத்தை அமெரிக்க ஜனாதிபதி மாளிகையிடமும், நாடாளுமன்றத்திடமும் இந்தியா எடுத்துச்செல்லும். டெல்லியில் செப்டம்பர் 6-ந் தேதி நடக்கிற அமெரிக்க, இந்திய பேச்சுவார்த்தையின்போதும் இந்த விவகாரம் எழுப்பப்படும்” என்று கூறினார்.
இந்த நிலையில், ‘எச்-1 பி’ விசா கொள்கையில் இப்போதைக்கு மாற்றம் இருக்காது என்று அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுபற்றி பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கூறுகையில், “டெல்லியில் நடக்க உள்ள பேச்சுவார்த்தையின்போது இந்தியா ‘எச்-1 பி’ விசா பற்றி பிரச்சினை எழுப்புகிறபோது அதற்கு பதில் அளிக்க அமெரிக்காவும் தயார் ஆகி வருகிறது. டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்து உள்ள உத்தரவானது, அமெரிக்கர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ‘எச்-1 பி’ விசா வழங்குவது நிர்வகிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. எனவே அதை உறுதிப்படுத்துகிற விதத்தில் பரிசீலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த விசா பரிசீலனையில் மாற்றம் இல்லை. எனவே இதில் என்ன மாற்றம் வரப்போகிறது என்பதை கணிக்க இயலாது” என குறிப்பிட்டார்.