Breaking News
கற்பழிப்பு குற்றச்சாட்டு எதிரொலி: பொறுப்புகளை மற்றொருவரிடம் பேராயர் ஒப்படைத்தார்

கேரள கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகாரில் சிக்கிய பேராயர் பிராங்கோ மூலக்கல், தனது பொறுப்புகளை மற்றொருவரிடம் ஒப்படைத்தார். இதற்கிடையே அவருக்கு எதிரான போராட்டம் நேற்று 8-வது நாளை எட்டியது.

கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் மீது கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். கேரளாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை, வைக்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு 19-ந் தேதி (புதன்கிழமை) ஆஜராகுமாறு பேராயர் பிராங்கோவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். எனவே ஜலந்தர் மறைமாவட்ட நிர்வாக பொறுப்புகள் தொடர்பாக பேராயர் பிராங்கோ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக மறைமாவட்டத்துக்கு உட்பட்ட தேவாலயங்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஜலந்தர் மறைமாவட்டத்தில் நான் இல்லாதபொழுது மறைமாவட்டத்தின் நிர்வாகத்தை மூத்த பாதிரியார் மேத்யூ கொக்கண்டம் கவனித்துக்கொள்வார்’ என கூறப்பட்டு உள்ளது.

தனக்கு எதிராக போலீசார் வைத்துள்ள ஆதாரங்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக கூறியுள்ள அவர், அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். முன்னதாக கற்பழிப்பு புகாரை மறுத்திருந்த பேராயர், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பேராயரை கைது செய்ய வலியுறுத்தி கன்னியாஸ்திரிகள் மற்றும் கத்தோலிக்க சீர்திருத்த அமைப்புகள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 8-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் மகளிர் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

ஜலந்தர் மறைமாவட்ட நிர்வாகம் தொடர்பாக பேராயர் பிராங்கோ மூலக்கல் எடுத்துள்ள முடிவை வரவேற்ற கன்னியாஸ்திரி ஒருவர், எனினும் அந்த மறைமாவட்டத்தின் பரவலான அதிகாரம் அனைத்தையும் அவரே வைத்திருப்பதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நீதி கிடைக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறினார்.

இந்த போராட்டத்துக்கு எர்ணாகுளம்-அங்கமாலி சீறோ மலபார் மறைமாவட்டத்தை சேர்ந்த பாதிரியார்கள் சிலர் நேற்று நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். பிராங்கோ மூலக்கல்லுக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் எல்லை மீறி செல்வதாக கேரள கத்தோலிக்க ஆயர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த பாதிரியார்கள் ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.