புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் 2-வது வெற்றி
6-வது புரோ கபடி லீக் தொடரில் புனேயில் நேற்றிரவு நடந்த 30-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, புனேரி பால்டனை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் லேசான முன்னிலை பெற்றிருந்த (16-15) தமிழ் தலைவாஸ் அணி, பிற்பகுதியில் மேலும் சிறப்பாக செயல்பட்டது. முடிவில் தலைவாஸ் அணி 36-31 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. எதிரணியை இரண்டு முறை ஆல்-அவுட் செய்து 4 புள்ளிகள் பெற்றது தலைவாசின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.
தனது முதல் ஆட்டத்தில் பாட்னா பைரட்சை வீழ்த்திய தமிழ் தலைவாஸ் அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் மண்ணை கவ்வியது. ஒரு வழியாக சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்பி இருக்கிறது. புனே அணிக்கு இது 3-வது தோல்வியாகும். தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாகூர் ரைடு மூலம் 12 புள்ளிகள் சேர்த்தார். அத்துடன் புரோ கபடி வரலாற்றில் 600 ரைடு புள்ளிகளை குவித்த 3-வது வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா அணி 41-20 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை ஊதித்தள்ளியது. இன்றைய ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 8 மணி), புனேரி பால்டன்-உ.பி. யோத்தா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.