நந்தினி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி 10-ந்தேதி ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் பேட்டி
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள சிறுகடம்பூரை சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (வயது 17). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் கிணற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து இரும்புலிக் குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன், அவரது உறவினர் மணிவண்ணன் உள்பட 4 பேரை கைது செய்தனர். மணிகண்டன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கொல்லப்பட்ட சிறுமி நந்தினியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து நிதி உதவி அளித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்; சிறுமி நந்தினியின் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும். இந்த வழக்கை சரியாக விசாரிக்காத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 10-ந்தேதி அரியலூரில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.
நன்றி : தினத்தந்தி