Breaking News
அமேசான் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்தை அனுப்பியது பிரேசில்

உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசான் மழைக்காடுகள். இந்த காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மேலும் அமேசான் காடுகளே பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.

அமேசான் காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் காட்டுத்தீ பற்றியது. தொடர்ந்து சில தினங்களாக பற்றி எரிந்த தீ காடு முழுவதும் பரவி வருகிறது.

இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்

சர்வதேச தலைவர்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் பிரான்சில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் அமேசான் காட்டுத்தீ குறித்து விவாதிக்க அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் சர்வதேச தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரேசில் அதிபர் போல்சோனரோ பொய்யான தகவல்களைத் தருவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் சுற்றுச்சூழல் பிரச்சினையை பிரேசில் அதிபர் போல்சோனரோ பெரிதுப்படுத்தவில்லை என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இம்மானுவேல் மெக்ரானின் இந்த கருத்துக்கு பிரேசில் அதிபர் போல்சனாரோ, அமேசான் காட்டுத்தீ பிரச்சினையில் உலக நாடுகள் தலையிட வேண்டாம் என காட்டமாக பதில் அளித்துள்ளார். பிரேசில் அதிபர் தீயை அணைக்க ராணுவத்தை அனுப்ப உத்தரவிட்டு உள்ளார். ஐரோப்பிய தலைவர்களின் கடுமையான அழுத்தத்திற்கு பிறகே இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அமேசான் தீயை அணைக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கடந்த 15 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அமேசான் படுகை முழுவதும் ஏற்பட்ட ஒட்டுமொத்த தீ ஆனது 15 ஆண்டுகளின் சராசரிக்கு அருகில் உள்ளது என்று கூறியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.