அமெரிக்காவில் டிரம்பால் நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ‘திடீர்’ ராஜினாமா
அமெரிக்காவில் டிரம்பால் நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பால் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டு, கடந்த 20-ந் தேதி பொறுப்பேற்றவர் மைக்கேல் பிளின் (வயது 58). இவர் முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார்.
இவரை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிப்பதாக டிரம்ப் அறிவித்த நாள்முதல் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நவம்பர் 8-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே இவர் ரஷியாவுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக இவர் ரஷியாவுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தார், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினோடும் தொடர்பில் இருந்தார் என கூறப்பட்டது.
குற்றச்சாட்டு
அத்துடன் அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் செர்கெய் கிஸ்ல்யாக்கை தொடர்பு கொண்டு, ரஷியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்க சட்டத்துக்கு விரோதமாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.
அது மட்டுமின்றி, இதுபற்றி துணை ஜனாதிபதி மைக் பென்சுடனும் விவாதித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் மைக்கேல் பிளின், ஆரம்பத்தில் இதையெல்லாம் மறுத்து விட்டார்.
ராஜினாமா
ஆனால் ரஷியாவுடன் அவர் தொடர்பு கொண்டு பேசியது தொடர்பான தகவல்களை ஒபாமா காலத்திய அரசு அதிகாரிகள், டிரம்பின் வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம் தெரிவித்து, மைக்கேல் பிளின் பற்றி எச்சரித்தனர்.
இதுபற்றி தெரியவந்ததைத் தொடர்ந்து மைக்கேல் பிளின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
மன்னிப்பு கேட்டார்
தனது ராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி டிரம்பிடமும், துணை ஜனாதிபதி மைக் பென்சிடமும் மைக்கேல் பிளின் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். பதவி ஏற்பதற்கு முன்னர் அமெரிக்க தூதரிடம் தான் நடத்திய பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை முழுமையாக தெரிவிக்காததற்கு, வருத்தம் தெரிவித்துள்ளார்.
மைக்கேல் பிளின், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சரியாக மூன்றே வாரங்கள் மட்டும் பதவியில் இருந்துள்ளார்.
விசாரணை
ஆனால் மைக்கேல் பிளின் ராஜினாமாவுடன் பிரச்சினை முடிவுக்கு வந்து விடாது; ரஷியாவுடனான அவரது தொடர்புகள் குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சி குரல் கொடுத்துள்ளது.
மேலும், இது தொடர்பாக பாராளுமன்றத்தில் நீதித்துறையும், அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ.யும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஜனநாயக கட்சி வலியுறுத்தி உள்ளது.
மைக்கேல் பிளின் விலகலை தொடர்ந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக தற்காலிகமாக ஜெனரல் ஜோசப் கீத் கெல்லாக் நியமிக்கப்பட்டுள்ளார். இதை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நன்றி : தினத்தந்தி