முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவை கூட்டம்..!
சென்னை,
மழை வெள்ள சேதம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் நிவாரணம் குறித்து ஆலோசனை செய்வதற்காக நாளை மறுநாள் (19-ந் தேதி) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது.
தமிழகத்தில் பல இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து பலத்த சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. பல பகுதிகளில் வீடுகள், குடிசைகள் சேதமடைந்தன. டெல்டா மாவட்டங்கள் உள்ளிட பல மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கிவிட்டன.
இந்த நிலையில் நாளை மறுதினம் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடத்தப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது. வரும் டிசம்பர் மாதத்தில் நகராட்சி தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அதற்கான ஆலோசனை, இந்த அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
மேலும் தமிழகத்தில் பெய்து வரும் மழையினால் ஏற்பட்டுள்ள சேதங்கள், சேத மதிப்பு மற்றும் அதற்காக மத்திய அரசிடம் கேட்க வேண்டிய நிதி ஆகியவை பற்றி அமைச்சரவையில் முடிவு மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.