ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது….!
சென்னை,
வங்க கடலில் கடந்த 13-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. அது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று நெருங்குகிறது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, தற்போது புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 300 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம் – தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை இன்று இரவு நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் தமிழகத்தில் மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை (ரெட் அலர்ட்) வானிலை மையம் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.