கடன் தொல்லையால் 10 வயது மகனை கொன்று கணவன்- மனைவி தற்கொலை
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் வசித்து வந்தவர் சிவாஜி (வயது 43) டெய்லர். இவரது மனைவி வனிதா (33). பி.ஏ. பட்டதாரியான இவர் தனியார் பைப் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார்.
இவர்களது ஒரே மகன் வெற்றிவேல் (10). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
சிவாஜிக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டார். இதனால் அவர் பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவரால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.
பணம் கொடுத்தவர்கள் சிவாஜிக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இது குறித்து அவர் தனது மனைவியிடம் கூறி மனவேதனை அடைந்தார்.
இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரம் வரை அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் வனிதாவின் தாய் வத்சலா வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது அங்குள்ள அறையில் சிவாஜி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அதன் அருகே தரையில் வனிதாவும், மகன் வெற்றிவேலும் இறந்த நிலையில் கிடந்தனர். வனிதாவின் கழுத்தில் கயிறு அறுந்த நிலையில் இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வத்சலா புதுவண்ணாரப்பேட்டை போலீசிற்கு தகவல் தெரிவித்தார். உதவி கமிஷனர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வனிதா தூக்கில் தொங்கியபோது கயிறு அறுந்து கீழே விழுந்து இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் சிறுவன் வெற்றிவேல் எப்படி இறந்தான் என்பது மர்மமாக உள்ளது. அவரது உடலில் எந்த காயமும் இல்லை. எனவே சிவாஜியும், வனிதாவும் தங்களது மகன் வெற்றிவேலை கொலை செய்து விட்டு அவர்கள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே சிவாஜியின் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் கடன் தொல்லையால் அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே நாங்கள் தற்கொலை செய்கிறோம். எங்களை மன்னிக்கவும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக வனிதாவின் தாய் வத்சலா கூறும்போது, சிவாஜிக்கு கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி நெருக்கடி கொடுத்தனர். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்தார் என்றார்.
இதையடுத்து சிவாஜிக்கு கடன் கொடுத்தவர்கள் யார்? யார்? அவருக்கு பணம் கேட்டு யாரேனும் மிரட்டல் விடுத்தனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.