கொரோனா பாதிப்பு நிலவரம்: தமிழகம் உள்பட தென் மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை
புதுடெல்லி,
இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா 3-வது அலை வேகம் பெற்றுள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு லட்சங்களில் பதிவாகி வருகிறது. நேற்று மட்டும் தினசரி பதிப்பு 2.55 லட்சமாக இருந்தது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாக கவலை தெரிவித்தார். ராஜேஷ் பூஷன் கூறுகையில், “ கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று குறைந்து வருகிறது” என்றார்.
இந்த நிலையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி மூலம் பிற்பகல் 2.30-மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தென் மாநிலங்களில் கொரோனா நிலவரம், பொது சுகாதாரத்துறையின் தயார் நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, லட்சத்தீவு, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சுகாதார மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். முன்னதாக ஒன்பது வட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியிருந்தார்.