‘படைகளை நிறுத்துங்கள்; அமைதிக்கு வாய்ப்பு கொடுங்கள் அதிபர் புதின்’ – ஐ.நா. பொதுச்செயலாளர்
நியூயார்க்,
உக்ரைன் மீது போர் தொடுக்க நினைக்கும் ரஷியா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் இரண்டாவது முறையாக இன்று தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், உக்ரைன் மீது போர் தொடுக்க நினைக்கும் ரஷியா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இன்று கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் பேசுகையில், “ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனைத் தாக்கும் உங்கள் படைகளை நிறுத்துங்கள். அமைதிக்கு வாய்ப்பு கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்கா பிரதிநிதி கூறுகையில், “உக்ரைனின் இறையாண்மையை ரஷ்யா உண்மையில் மீறியுள்ளது.ரஷ்யாவின் நடவடிக்கைக்கு நாங்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்து பதிலடி கொடுப்போம். ரஷ்யாவின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும், அவர்களது படைகளை தங்கள் எல்லைக்குத் திரும்பவும், படைகளை மீண்டும் படைமுகாமிற்கு அனுப்பவும் கோரி நாங்கள் இங்கு வந்துள்ளோம். ரஷியா தனது பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர வேண்டும்” என்று அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் அதே வேளையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் மீது போர் தொடுக்க ராணுவ படைகளுக்கு ஆணை பிறப்பித்து அதிர்ச்சியளித்துள்ளார்.