Breaking News
உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு போலந்து உதவி… என்னென்ன நடைமுறைகள்?
வார்சா,
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்தது.  ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.
போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவித்தன.
இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்க தொடங்கின.  நேற்று முன்தினம் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளது என்று உக்ரைன் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
ரஷியாவுடனான முதல் நாள் போரில் இதுவரை 137 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.  நேற்று 2வது நாளாகவும் போர் நீடித்தது.
இதேபோன்று, ரஷிய தரப்பில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டு விட்டன.  ரஷிய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
இந்த போர் பதற்ற சூழலில், உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்தியா ஈடுபட்டு உள்ளது.  இந்த நிலையில், போலந்துக்கான இந்திய தூதர் நக்மா மல்லிக் கூறும்போது, உக்ரைனில் சிக்கி தவித்து வரும் மாணவர்கள், இந்தியர்கள் அனைவரையும் முதலில் தரை வழியாக போலந்துக்கு வருவதற்கு அந்நாடு எளிய வழிகளை செய்துள்ளது.  வேறு நாட்டினர் அனைவரையும் வெளியேற்றவும் போலந்து உதவிகளை செய்து வருகிறது என கூறியுள்ளார்.
உக்ரைனில் இருந்து மேற்கு பகுதி வழியே வெளியேற வசதியாக நாங்கள் 3 குழுக்களை அமைத்துள்ளோம் என தெரிவித்து உள்ளார்.  இதற்கு முன், போலந்து வழியே வெளியேற விரும்பும் இந்தியர்களுக்கான சமீபத்திய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இதன்படி, போலந்து வழியே வெளியேற விரும்பும் இந்தியர்கள் அதற்காக அமைக்கப்பட்டு உள்ள தூதரகங்களை அணுக வேண்டும்.  அதற்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
1) லிவிவ் தொடர்பு அலுவலகம், விவேக் சிங், தொலைபேசி எண் +48 881 551 273.
2) கிராகோவீக் தூதரக அலுவலகம், சுபம் குமார், தொலைபேசி எண் +48 575 467 147
3) 2) மெடிகா தூதரக அலுவலகம், ரஞ்சித் சிங், தொலைபேசி எண் +48 575 762 557
இதுதவிர, தூதரக கட்டுப்பாட்டு அறை, வார்சா, சுக்வீந்தர் மாலிக் தொலைபேசி எண்கள் +48606700105 மற்றும் +48225400000 ஆகியவையும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
போலந்து-உக்ரைன் எல்லை வழியே வந்து சேரும் இந்திய குடிமக்கள் பேருந்து அல்லது டாக்சி ஆகிய பொது போக்குவரத்து வசதியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  அவர்கள் செஹைனி-மெடிகா எல்லை வழியே கடந்து வரும்படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த செஹைனி-மெடிகா எல்லை பகுதி வழியே மக்கள் நடந்து செல்ல மட்டுமே போலந்து அரசு அனுமதி அளித்துள்ளது.
கிராகோவிக் எல்லை வழியே தங்களது சொந்த வாகனங்களில் கடந்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
போலந்துக்குள் கடந்து செல்லும் இந்தியர்கள் கூகுள் விண்ணப்பத்தில் தங்களது விவரங்களை நிரப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
இதற்கான கூகுள் விண்ணப்பம் https://forms.gle/TPmtUeMh98Q4XgvP9 ஆகும்.  இதன் அடிப்படையில், அவர்களது வேண்டுகோள்களை பரிசீலனை செய்து விமானங்களில் சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.