பெண்ணை விட பெருமை உடையது எவை?- ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
‘‘கடவுள் கோவிலில் சிலைகளாகவும், குடும்பத்தில் பெண்களாகவும் இருக்கிறாள்’’ என்றால் அதை மறுப்போர் யாரும் இருக்க முடியுமா? அன்பு அன்னையாய், ஆருயிர் மனைவியாய், அருமை மகளாய் எத்தனை வடிவில் தோன்றினாலும் பெண் என்பவள் தெய்வம் தான்.
அ.தி.மு.க.வின் தொண்டனுக்கு “அம்மா’’ என்னும் தலைவியும், தெய்வமானது அரிதினும், அரிதான அருங்கொடை அல்லவா?
ஒவ்வொரு நிமிடமும் உழைத்துக் கொண்டிருக்கும் பெண், தன் பணிகளில் எதையேனும் இனி செய்வதில்லை என்றோ அல்லது சிறிது காலம் ஒத்திவைப்பது என்றோ முடிவெடுத்தால் இந்த உலகம் எப்படி இயங்கும் என்பதை சிந்தித்துப் பார்த்தாலே, பெண் தான் உலகை இயக்கும் அன்னை மகா சக்தி என்பது விளங்கும்.
பெண்மையைப் போற்றி வணங்கவும், பெண் இன்றி உலகம் இல்லை என்பதை உணர்த்தவும், பெண்ணின் தியாக வாழ்வுக்கு வணக்கம் செலுத்தவும், ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந்தேதி “சர்வதேச மகளிர் தினமாக’’ கொண்டாடப்படுகிறது.
இந்தப் புண்ணிய நாளில் மகளிர் தின நல்வாழ்த்துகளையும், வணக்கங்களையும் அனைவருக்கும் தெரிவித்து மகிழ்கிறோம்.
அ.தி.மு.க. பெண்மையைப் போற்றி, வணங்கி, சிறப்பித்து, பாதுகாத்திட உருவான இயக்கம் என்பதும், தமிழ்நாட்டில் பெண்கள் வாழ்வு சிறக்க, கழக அரசுகள் நிகழ்த்திய சாதனைகளும் வரலாற்றுச் சிறப்புக்கு உரியனவாகும்.
புரட்சித் தலைவி அம்மா தனது ஆட்சிக் காலத்தில் பெண்கள் வாழ்வு மேம்பட ஆற்றிய பணிகள் ஏராளம்: பெண் சிசுக் கொலையைத் தடுக்க தொட்டில் குழந்தைத் திட்டம், நாட்டிலேயே முதல் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெண் கல்வியை ஊக்குவிக்க ரொக்கப் பரிசு, தாலிக்குத் தங்கம், மகப்பேறு நிதி உதவி, பெண்களின் பணிச் சுமையை எளிதாக்க மிக்சி, கிரைண்டர், இளம்பெண்களின் இன்னல் களைய விலை இல்லா சானிட்டரி நாப்கின் என்று எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தினார்கள்.
எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றி, சமூகத்தில் ஆணுக்கு நிகராக மட்டும் அல்ல, ஆற்றல் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி, பெண் எத்தனை உயரத்திற்கு செல்ல முடியுமோ, அத்தனை உயரத்திற்குச் சென்று சீரும், சிறப்புமாக வாழ, அனைத்திந்திய அ.தி.மு.க. எந்நாளும் உழைக்கும் என்று இந்தப் பொன்னாளில் உறுதி அளிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
மகளிர் தினத்தையொட்டி நாளை கட்சி தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி தலைமையில் கேக் வெட்டப்படுகிறது. மேலும் விதவைகளுக்கு தையல் எந்திரம், பழ வியாபாரம் செய்வதற்கு நிதி உதவி, மதிய உணவு 1,500 பேருக்கு வழங்கப்படுகிறது.