Breaking News
உலக மகளிர் தினம்: தலைவர்கள் வாழ்த்து
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் 8-ஆம் தேதி கொண்டப்படுகிறது. பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் மகளிரை கொண்டாடும் இந்த தினத்தில் பல்வேறு தலைவர்கள் மகளிருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பெண் ஏன் அடிமையானாள்?” என்று கேள்வி எழுப்பி, அறிவொளிப் பாய்ச்சிய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கருணாநிதி ஆகியோரது வழி நடைபோடும் நமது ‘திராவிட மாடல்’ அரசு, மகளிர்க்கான எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
ரத்த பேதம், பால் பேதம் கூடாது என்ற முழக்கத்தோடு, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கான சமூக விடுதலைக்காகப் போராடும் இயக்கம்தான் திராவிட இயக்கம்.
மகளிருக்காக  தி.மு.க. அரசு செயல்படுத்திய திட்டங்கள், இன்று நாட்டுக்கே வழிகாட்டியாகஅமைந்துள்ளன. பெண்களது நலனும் உரிமையும் காக்கப்படும் என்றும் மகளிர் முன்னேற்றத்திற்கு நமது ‘திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என முதல் அமைச்சர்  தெரிவித்துள்ளார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை  சவுந்தரராஜன் டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், “தடைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி… சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துகிறேன். அனைத்து மகளிர்களுக்கும் எனது இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் ” என தெரிவித்துள்ளார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்து குறிப்பில் “இந்த மகளிர் தினத்தில் பெண்களின் சக்திக்கும் பல்வேறு துறைகளில் அவர்கள் செய்த சாதனைகளுக்கும் நான் தலை வணங்குகிறேன். இந்திய அரசு எப்போதும் கண்ணியம் மற்றும் வாய்ப்புகளுக்கு  முக்கியத்துவம் அளித்து அதன் பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்தும்”  என தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.