குண்டு மழைக்கிடையே 1,300 கி.மீ. திகில் பயணம் குறித்து கர்நாடக பெண்கள் விவரிப்பு
ரஷியா- உக்ரைன் போரை தொடர்ந்து அங்கு தவித்து வந்த இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பலர் உயிருக்கு பயந்து பல்வேறு வழிகளில் அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்கள்.
அந்த வகையில் கர்நாடகாவை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 இந்தியர்கள் போர்களத்திற்கு நடுவே காரில் திகில் பயணம் மேற்கொண்டு இந்தியா வந்தடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ரட்சனா ஸ்ரீ, சுமேகா ஆகிய இருவரும் உக்ரைனில் தங்கி இருந்து மருத்துவம் படித்து வந்தனர்.
கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போர் தொடங்கிய நாளில் இருவரும் அங்கிருந்து காரில் ஊர் திரும்ப திட்டமிட்டனர். இதற்காக உக்ரைனில் உள்ள நண்பர்கள் சிலர் உதவியோடு ஒரு காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.
அவர்களோடு ஆந்திராவை சேர்ந்த 3 மாணவர்களும் இணைந்து கொண்டனர். இவர்கள் 5 பேரும் தரை மார்க்கமாக உக்ரைனில் இருந்து காரில் புறப்பட்டனர். உக்ரைனில் இருந்து 5 பேரும் வெளியேறும் நேரத்தில் போர் தொடங்கி இருந்தது.
ரஷிய படையினர் உக்ரைனில் புகுந்து அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தங்களது காரில் இந்திய கொடியை கட்டிக்கொண்டு போர்களத்திற்கு நடுவே எப்படியும் சென்றுவிட வேண்டும் என்று முடிவு செய்தனர். ஆனால் கொடி கிடைக்கவில்லை.
இதையடுத்து வெள்ளை பேப்பர் ஒன்றில் இந்திய கொடியை கலரில் வரைந்து அதனை காரின் முன்னால் ஒட்டிக்கொண்டு அங்கிருந்து உயிரை கையில் பிடித்தபடியே புறப்பட்டனர்.
போர்களத்திற்கு நடுவே குண்டு சத்தம், தோட்டாக்களின் பாய்ச்சல் ஆகியவற்றை எதிர்கொண்டு 1300 கி.மீட்டர் தூரத்தை கடந்து உக்ரைன் எல்லையை வந்தடைந்து பின்னர் தங்களது ஊர்களுக்கு திரும்புகின்றனர்.
ரட்சனா ஸ்ரீ பெங்களூரை சேர்ந்தவர், சுமேகா சித்தரதுர்கா பகுதியை சேர்ந்தவர். கர்நாடகா வந்து சேர்ந்த பின்னர் இருவரும் போர்களத்திற்கு நடுவே பீதியுடன் பயணம் செய்தது குறித்து பயத்துடன் விவரித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறி இருப்பதாவது:-
பிப்ரவரி 23-ந்தேதி உக்ரைன் தலைநகர் கார்கிவில் இருந்து புறப்பட்டோம். மறுநாள் 24-ந்தேதி போர் உச்சக்கட்டத்தை எட்டி இருந்தது. அங்குள்ள எங்கள் நண்பர் ஒருவர் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
24-ந்தேதி அன்று இரவு 11 மணி அளவில் உக்ரைனில் உள்ள உஸ்கராட் நகரத்தை கடந்து விட்டோம். இருப்பினும் அங்கிருந்து உக்ரைன் எல்லையை அடைய நாங்கள் பல இன்னல்களை சந்தித்தோம். உக்ரைன் ராணுவ வீரர்கள் பெரும்பாலான நேரங்களில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது காரில் சொந்த எல்லையை அடைய அருக்கிறோம் எனத் தெரிவித்து விட்டு புறப்பட்டோம். அவர்கள் எங்களுக்கு சாப்பிர உணுவு தந்தனர். மேலும், லைட் ஆன் செய்து காரை ஓட்ட வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். இந்த பயணத்தின்போது 48 மணி நேரத்திற்குள் 4 முறை நிறுத்தி நிறுத்தி எங்களை விசாரித்தனர். கார் பயணத்தின்போது குண்டு மழை பொழியும் சத்தம் கேட்டது.
இதனால் மறுநாள் சூரிய உதயத்தை பார்ப்போமா என்கிற அச்சமும் ஏற்பட்டு இருந்தது. இதையெல்லாம் தாண்டி எப்படியும் எல்லையை அடைந்து விடலாம் நம்பிக்கை இருந்தது. பெட்ரோலுக்காக ரூ.30 ஆயிரம் செலவழித்தோம். எதையாவது சாப்பிட்டால் வயிறு பிரச்சினை ஏற்படும் என்கிற பயம் எங்களுக்கு இருந்தது. எனவே எங்களிடம் இருந்த சாக்லேட்டை சாப்பிட்டு, தண்ணீர் கூட குடிக்காமல் இருந்தோம். இப்படியாக கஷ்டப்பட்டு உக்ரைன் எல்லையை அடைந்து, பின்னர் கடந்த 6-ந்தேதி இந்தியா வந்தடைந்தோம். போர்க்களத்தில் பயணம் செய்தபோது எங்கள் கண்முன்னே உயிரிழப்பு ஏற்படுவதை நேரில் பார்த்தோம்.
நாங்கள் பயணம் செய்த இடம் அருகில் வெடிபொருள் ஒன்று விழுந்து வெடித்தது. இதில் டிரைவர் ஒருவர் உயிரிழந்ததையும் நேரில் கண்டோம். துப்பாக்கி சூடு சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால் உயிர் பிழைப்போமா? என்கிற அச்சமும் ஏற்பட்டது.
எப்போதும் மறக்க முடியாத பயணமாக இந்த பயணம் அமைந்திருந்தது. உக்ரைனில் இருந்து திரும்பி சொந்த ஊருக்கு வந்ததை அதிர்ஷ்டவசமான செயலாகவே நாங்கள் பார்க்கிறோம்.