பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்
புதுடெல்லி :
மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்துக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரஷியா-உக்ரைன் போர் நீண்ட நாட்களாக நடந்தாலும், இப்போதுதான் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்த்தப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இது முற்றிலும் உண்மையல்ல.
கச்சா எண்ணெய் வினியோகத்தில் தடங்கல், போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை 2 வாரங்களாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அதனால், கடந்த 8 நாட்களாக இங்கு விலை உயர்வு காணப்படுகிறது.
சர்வதேச விலைக்கு ஏற்ப நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
பெட்ரோலிய பொருட்களை குறைந்த விலையில் விற்பதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்கள் வினியோகிக்கப்பட்டன.
அப்படி கொடுத்த பத்திரங்களுக்கு பொதுமக்கள் இப்போதும் பணம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
2026-ம் ஆண்டு வரை எண்ணெய் பத்திரங்களை மீட்பது நீடிக்கும் என்பதால், இன்னும் 5 ஆண்டுகளுக்கு மக்கள் பணம் செலுத்த வேண்டி இருக்கும்.
வாஜ்பாய் ஆட்சி காலத்திலும் எண்ணெய் பத்திரங்கள் வெளியிடப்பட்டதாக கூறுகிறார்கள். அப்போது, வெறும் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்புள்ள பத்திரங்கள்தான் வெளியிடப்பட்டன. இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.