அரசுமுறை பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி
பெர்லின்,
கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. உக்ரைன்-ரஷிய போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இது 3 நாள் பயணம். மொத்தம் 25 நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.
இதன்படி முதலில் ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சின் அழைப்பின் பேரில் இன்று ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இரு நாடுகளும் தூதரக உறவை தொடங்கி 70 ஆண்டுகள் ஆகும் நிலையில், பிரதமர் ஓலப் ஸ்கால்சுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார்.
6-வது இந்தியா-ஜெர்மன் அரசுகளுக்கிடையிலான ஆலோசனைக்கு இரு நாட்டு பிரதமரும் தலைமை வகிக்கிறார்கள். தொடர்ந்து இந்திய மந்திரிகள் பலரும் ஜெர்மனிக்கு வந்து தங்கள் இலாகா மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியை தொடர்ந்து டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெட்ரிக்சன் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி மே 3, 4 ஆகிய தேதிகளில் கோபன்ஹேகன் நகருக்குச் செல்கிறார்.
அங்கு நடைபெறும் 2-வது இந்தியா-நோர்டிக் உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து இந்தியா வரும் வழியில் பாரிசில் சிறிது நேரம் தங்கி இருந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் இந்த 3 நாள் பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.