ராஜா அண்ணாமலைபுரத்தில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி 259 வீடுகளை இடிக்கும் பணி தீவிரம்
சென்னை:
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வீடுகளை இடிக்க உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து கடந்த 29-ந்தேதி வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
கோர்ட்டு உத்தரவின் படியே வீடுகள் இடிக்கப்படுவதாக போலீசார் மற்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பொதுமக்கள் நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம். அதற்கான ஆவணங்கள் வைத்திருக்கிறோம் என்று தெரிவித்தனர். இருப்பினும் வீடுகளை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இன்று 4-வது நாளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொதுமக்களின் எதிர்ப்பை மீறி 259 வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். படிப்படியாக வீடுகள் இடிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பும் தொடர்கிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் ஆகியோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தங்களது பிள்ளைகள் இந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் படித்து வருகிறார்கள். எனவே ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள் என்று பொதுமக்களில் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அதிகாரிகளோ கோர்ட்டு உத்தரவு என்பதால் இடிக்கும் பணியை தொடர்வதை தவிர வேறு வழி இல்லை என்று கூறிவிட்டு வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.