ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து நகை வாங்கினால் 1 சதவீதம் வரி ஏப்ரல் 1–ந் தேதி முதல் அமல்
ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து நகை வாங்கினால், இனி 1 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ஏப்ரல் 1–ந் தேதி இது அமலுக்கு வருகிறது.
தற்போதைய வரி விதிப்பு
தற்போது ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்க கட்டிகள், பிஸ்கெட்டுகள் வாங்கினாலும், ரூ.5 லட்சத்துக்கு மேல் தங்க நகை வாங்கினாலும் அதற்கு 1 சதவீதம் ரொக்க வரி (டி.சி.எஸ்.) விதிக்கப்பட்டு வருகிறது.
இது 2012–ம் ஆண்டு, ஜூலை 1–ந் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது.
ஆனால் ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினாலே, 1 சதவீதம் ரொக்க வரி (டி.சி.எஸ்.) விதிக்க மத்திய அரசு முடிவு செய்து 2016–17 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் சிறுகச்சிறுக பணம் சேர்த்து சுமார் 9 அல்லது 10 சவரன் நகை வாங்குகிறவர்களும் 1 சதவீதம் வரி செலுத்துகிற நிலை உருவானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1–ந் தேதி அது வாபஸ் பெறப்பட்டது.
பட்ஜெட் அறிவிப்பு
இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை ஒழித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, ரொக்க பணமில்லா பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட ரொக்க பண பரிமாற்றத்துக்கு தடையும் விதித்துள்ளது.
ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கம் கொடுத்து எந்தவொரு பொருளையோ, சேவையையோ வாங்கினால் 1 சதவீத ரொக்க வரி விதிக்கும் வகையில் 2017–18 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 1–ந் தேதி அமல்
அதாவது, பொருள் என்கிற பிரிவிலேயே நகைகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. இதை மத்திய அரசு அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், ‘‘ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து பொருட்கள், சேவைகள் வாங்கினால் அதற்கு 1 சதவீத ரொக்க வரி செலுத்த வருமான வரிச்சட்டம் வகை செய்கிறது. இப்போது பொருட்கள் என்ற பிரிவில் நகைகளும் சேர்க்கப்படுகிறது. எனவே ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து தங்க நகை வாங்கினாலும் 1 சதவீதம் ரொக்க வரி செலுத்த வேண்டும்’’ என கூறினார்.
பட்ஜெட் (நிதி மசோதா) நிறைவேறிவிட்டால், இது ஏப்ரல் 1–ந் தேதி அமலுக்கு வந்து விடும்.
தற்போதைய நிலவரப்படி பார்த்தால் ஒருவர் ரொக்கப்பணம் கொடுத்து 9 சவரன் தங்க நகை வாங்கினாலே அதற்கு 1 சதவீதம் ரொக்க வரி (சுமார் ரூ.2 ஆயிரம்) செலுத்த வேண்டியது வரும். அந்த வரியை நகைக் கடைக்காரர்கள், பொதுமக்களிடம் வசூலித்து அரசுக்கு செலுத்துவார்கள்.
இது சாமானிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கை என்று இல்லத்தரசிகள் கூறுகிறார்கள்.
நன்றி : தினத்தந்தி