கோடை காலத்திலும் பாலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு- நிரம்பி வழியும் அணைகள்
வாணியம்பாடி:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் ஆந்திர காடுகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடைகாலத்திலும் பாலாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக பாலாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள கிளை ஆறுகளிலிருந்து மழை வெள்ளம் பெருக்கெடுத்தது.
இந்த உபரி நீரானது திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை, அம்பலூர் கொடையாஞ்சி வழியாக வாணியம்பாடி வரை பாலாற்றில் தண்ணீர் வந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக நிரம்பி வழிகிறது. நேற்று குடியாத்தம் மற்றும் ஆந்திர வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக மோர்தானா அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலையில் இருந்து 31 கன அடி தண்ணீர் வெளியேறியது. அங்கிருந்து பெரிய ஏரி பகுதிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது ஆறு முழுவதும் மணல் பரப்புகளை நிரப்பி விட்டுச் சென்றது. இதன் காரணமாக தற்போது லேசான மழையிலும் பாலாற்றில் ஆங்காங்கே தண்ணீர் ஊற்றெடுத்து வர தொடங்கியுள்ளது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.